தமிழ்நாடு

tamil nadu

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை: ஆந்திராவில் ஐயப்ப பக்தராக மாறுவேடத்தில் திரிந்த கொள்ளையன்..மடக்கிப் பிடித்த போலீசார்.. பின்னணி என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 3:56 PM IST

Coimbatore Jos Alukkas Robbery update: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட விஜய் தலைமறைவாக இருந்த நிலையில், ஆந்திராவில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்த 400 கிராம் தங்க நகைகளைத் தனிப்படை காவல்துறை மீட்டனர்.

police-arrested-gold-heist-vijay-in-coimbatore-joyalukkas-jewellery-robbery-case
ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கொள்ளை: ஆந்திராவில் ஐயப்ப பக்தராக மாறுவேடத்தில் திரிந்த கொள்ளையன்

கோவை: கோவை காந்திபுரம் 100 அடி வீதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 28ஆம் தேதி 4.8 கிலோ எடையுள்ள 575 சவரன் தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. நகைக்கடைக்குள் இருந்த இரண்டு அடி இடைவெளியைப் பயன்படுத்தி இந்த கொள்ளை சம்பவமானது நடைபெற்று இருந்தது. இதுகுறித்து விசாரிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது.

இந்த கொள்ளை சம்பவத்தில் தருமபுரியைச் சேர்ந்த 'விஜய்' என்பவர் ஈடுபட்டு இருப்பதும் அவர் சமீபகாலமாக, பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. இக்கொள்ளைச் சம்பவத்திற்கு விஜய்யின் மனைவி நர்மதா மற்றும் அவரது மாமியார் யோகராணி ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, விஜய்யின் மனைவி நர்மதாவிடமிருந்து நவ.30 ஆம் தேதி 3.2 கிலோ தங்க நகைகளைப் பறிமுதல் செய்த காவல்துறை நர்மதாவை கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து தனிப்படை காவல்துறை தருமபுரி மாவட்டம், தும்பலஹள்ளியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிலிருந்த விஜய்யின் மாமியார் யோகராணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.35 கிலோ தங்க நகைகளை காவல்துறை பறிமுதல் செய்தனர். நகைகளைக் குப்பைத் தொட்டியிலும், சாலை ஓரத்திலும் புதைத்து வைத்திருந்த நிலையில் அவற்றை மீட்டனர்.

இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி தருமபுரி மாவட்டம் தேவரெட்டியூரில் உள்ள தனது இல்லத்திற்கு வந்த விஜய், வீட்டில் 38 கிராம் நகையை வைத்துவிட்டுச் சென்றதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் விஜய்யின் தந்தை முனிரத்தினத்திடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் 6ஆம் தேதி இரவு விஜய்யின் தந்தை முனிரத்தினம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் பெரும்பாலானவை மீட்கப்பட்ட நிலையில், விஜய் தொடர்ச்சியாக தலை மறைவாக இருந்து வந்தார். ஐந்து தனிப்படை காவல்துறையினர் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் காளஹஸ்தி பகுதியில், ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்த வேடத்தில் விஜய் சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின்படி, தனிப்படை காவல் துறையினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். இந்நிலையில், காளஹஸ்தியில் இருந்து சென்னை வரும் வழியில் விஜய்யை தனிப்படை காவல் துறையினர் இன்று (டிச.11) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜய் தற்போது தனிப்படை காவல் துறையினரால் கோவை அழைத்து வரப்படுகிறார்.

விஜய்யிடம் இருந்து 400 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கொள்ளை நடந்து, 12 நாட்களுக்குப் பிறகு கொள்ளையன் விஜய் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய நபரான விஜய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நகைக்கடையில் இருக்கும் இடைவெளி குறித்து அவருக்குத் தகவல் சொன்ன நபர் யார்? இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என்பன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை காணும் பணியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

இதையும் படிங்க:கோவை ஜோஸ்ஆலுக்காஸ் நகைக் கடை கொள்ளையில் திடீர் திருப்பம்! கொள்ளையன் பொள்ளாச்சியில் பதுங்கலா? தனிப்படை அதிரடி வேட்டை!

ABOUT THE AUTHOR

...view details