தமிழ்நாடு

tamil nadu

விநாயகர் சிலையை இப்படி தயாரிங்க - ஜக்கிவாசு தேவின் அடடே யோசனை!

By

Published : Sep 7, 2021, 5:22 PM IST

ஜக்கிவாசு தேவ்
ஜக்கிவாசு தேவ்

இயற்கை மூலப் பொருள்களைக் கொண்டு விநாயகர் சிலைகளைத் தயாரிக்க வேண்டும் என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோயம்புத்தூர்: இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகருக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான பூஜைகள் செய்யப்பட்டு சதுர்த்திவிழா கொண்டாடப்படுகின்றது. அதன்படி இந்த ஆண்டு வருகின்ற 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

இருப்பினும் தற்போது கரோனா தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தனிநபர் வழிபாட்டுக்குத் தடைவிதிக்கப்படவில்லை.

ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொலி

இந்நிலையில் விநாயகர் சிலை தயாரிப்பு குறித்து ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தக் காணொலியில், “விநாயகர் இந்தியாவில் இருக்கும் கடவுள்களில் மிகவும் அழகானவர். அவருடைய அன்பான தன்மையாலும், குணத்தாலும், அவர் உலகம் முழுவதும் வணங்கப்படுகிறார். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி ஒரு முக்கியப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

பண்டிகை சமயத்தில், நாம் வணங்கும் விநாயகர் சிலைகளை மண், சிறுதானியம், மஞ்சள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை மூலப் பொருள்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும். நெகிழிப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கும் சிலைகளை நீரில் கரைக்க முடியாது.

இயற்கை மூலப் பொருள்களில் விநாயகர் சிலை

பானைகள் செய்வதைப் போல், சுடு மண்ணில் தயாரித்தாலும் அதைக் கரைக்க முடியாது. மேலும், சிலையின் மீது செயற்கை வர்ணங்களைப் பூசினால் அது நீரை மாசுபடுத்தும். ஆகையால் நீரில் கரையும் தன்மைகொண்ட இயற்கை மூலப் பொருள்களைக் கொண்டு மட்டுமே விநாயகர் சிலைகளைத் தயாரித்து, இவ்விழாவைக் கொண்டாட வேண்டும்.

ஒரு கடவுளை உருவாக்கி, அதை நீரில் கரைக்கும் சுதந்திரத்தை விநாயகர் சதுர்த்தி பண்டிகை நமக்கு வழங்குகிறது. அதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். நம் கலாசாரத்தைப் பாதுகாக்கவும், விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடவும் இதுவே சிறந்த வழி” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து காணொலி பதிவுடன் சேர்த்து, “நம் பிரியமான கணேசர் சூழலியலோடு மிகுந்த நட்புறவான கடவுளாவார் - எந்த மண்ணிலிருந்து உருவெடுத்தாரோ அதனுள்ளேயே மீண்டும் கரைந்திட விரும்புகிறார்.

அவர் கரைந்துபோக இயற்கையான பொருள்களால், அவர் உருவம் உருவாக்கப்பட வேண்டும். அவரைப் பொறுப்புடனும், அக்கறையுடனும் கொண்டாட உறுதியேற்போம். ஆசிகள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு கூடுதலாக ரூ.5,000 ஊக்கத்தொகை

ABOUT THE AUTHOR

...view details