ETV Bharat / state

மின் கேபிள் வயர் வெடித்து விபத்து; பெண் மீது பற்றிய தீ.. ஊழியர்கள் அலட்சியம்! - CHENNAI ACCIDENT NEWS

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 9:43 PM IST

Updated : May 13, 2024, 9:57 PM IST

Chennai electric-cable Accident: சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் கேபிள் வயர்கள் வெடித்து தீ பிடித்ததில் பெண் ஒருவர் காயமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Govt Kilpauk Hospital file Shot
Govt Kilpauk Hospital file Shot (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை, மேற்கு மாம்பலம் சம்பத் தெருவைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி மகாலட்சுமி மற்றும் குழந்தையுடன் அதே தெருவில் உள்ள டைலர் கடைக்குச் சென்றுள்ளார்.

பின்னர் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த போது, சாலையோரம் மின்வாரிய ஊழியர்களால் தோண்டப்பட்ட பள்ளம் இருந்துள்ளது. அதன் அருகிலேயே சரியாக மூடப்படாத மின் கேபிள் வயர்களும் கிடந்துள்ளன.

திடீரென மின் கேபிள் வயர்கள் வெடித்து தீ பற்றியதால் அருகில் நின்றிருந்த விவேகானந்தரின் மனைவி மகாலட்சுமியின் புடவையில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனடியாக விவேகானந்தன் தனது மனைவி மீது பற்றிய தீயை அப்பகுதியினர் உதவியுடன் அணைத்துள்ளார். இருப்பினும், மகாலட்சுமியின் கால்களில் தீப்பிடித்து காயம் ஏற்பட்டுள்ளது.

உடனே அவருக்கு அருகிலிருந்த மருத்துவமனையில் முதலுதவி கொடுக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விவேகானந்தன் கொடுத்த புகாரில் குமரன் நகர் போலீசார் அலட்சியமாகச் செயல்பட்டு தனிநபர் உயிருக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் யார் என குறிப்பிடாமல் வெறும் சட்டப்பிரிவுகளை மட்டுமே சேர்த்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மகாலட்சுமி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கால்களில் தீக்காயம் அதிக அளவில் இருப்பதால் தோலை அகற்றிவிட்டு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சம்பவம் நடந்தபோதோ அல்லது அதன் பிறகும் கூட இதுவரையில் மின்வாரியத்திலிருந்து வந்து யாரும் சந்திக்கவில்லை எனத் தெரிகிறது.

மேலும், மின் வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் தங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்குவதோடு தனது மனைவிக்கு முறையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென விவேகானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கொலையா, தற்கொலையா? - நெல்லை ஜெயக்குமார் வழக்கு குறித்து ஐஜி கண்ணன் விளக்கம்!

Last Updated :May 13, 2024, 9:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.