ETV Bharat / state

சவுக்கு சங்கர் விவகாரம்: பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே-27 வரை ரிமாண்ட்.. திருச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Felix Gerald police custody

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 10:39 PM IST

Updated : May 13, 2024, 11:04 PM IST

Felix Gerald police custody: சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே-27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு, வழக்கறிஞர் விக்னேஷ்வரன் புகைப்படம்
கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு, வழக்கறிஞர் விக்னேஷ்வரன் புகைப்படம் (credits - ETV Bharat Tamil nadu)

பெலிக்ஸ் ஜெரால்டு, வழக்கறிஞர் விக்னேஷ்வரன் (Video Credit to ETV Bharat Tamil Nadu)

திருச்சி: பெண் காவலர்களையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாகப் பேசி ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் பேட்டி அளித்திருந்தார். இது தொடர்பாகச் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தற்போது அவர் கோவை சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.

இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வந்த நிலையில், சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த யூடியூப் சேனல் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார். அதன்படி, கடந்த10 ஆம்‌ தேதி இரவு டெல்லியில், திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்தனர்.

இந்த நிலையில், டெல்லியிலிருந்து ரயில் மூலமாக பெலிக்ஸ் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், சென்னையிலிருந்து போலீஸ் வாகனம் மூலமாகத் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனை தொடர்ந்து, திருச்சி 3வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது பாரதி உட்பட 3 வழக்கறிஞர்கள் தங்களையும் மனுதாரராக இணைக்க வேண்டும் என கூறி வாதங்களை முன்வைத்தனர்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்டு அறிந்த பின் நீதிபதி, ஜெயப்பிரதா, சவுக்கு சங்கர் கொடுத்த நேர்காணலில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளைக் காண வேண்டும் என்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மே 27 ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, காவல்துறையினர் பெலிக்ஸை கைது செய்து திருச்சி மத்தியச் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பெலிக்ஸ் ஜெரால்டின் வழக்கறிஞர் விக்னேஷ்வரன் கூறியதாவது, “டெல்லியில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி நீதிமன்றத்தில் மாலை 5.30 மணியளவில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களைக் கேட்டு அறிந்த நீதிபதி, சவுக்கு சங்கர் வழங்கிய நேர்காணலைப் பார்த்துவிட்டு பின்னர் அவருக்கு 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டார். பல்வேறு குற்றச்சாட்டின் கீழ் வழக்குகள் அவர் மேல் பதியப்பட்டாலும், ஒரு வழக்கு மட்டுமே அவருக்குப் பிணை வழங்க முடியாத வகையில் உள்ளது. மற்றவை பிணை வழங்கும் வகையில் உள்ளது.

காவல்துறை தனக்கு எந்தவித தொந்தரவும் தரவில்லை என தெரிவித்தார். 167 பிரிவின் படி கைது செய்யப்பட்ட பகுதியில் உள்ள நீதிமன்றம் அவர்கள் ஆஜர்ப்படுத்தப்பட வேண்டும் என உள்ளது. ஆனால், அவர் அரசியல் பின்புலம் இருப்பதால் அவரை கொண்டு செல்லும்போது கூட்டம் திரளும் என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், சவுக்கு சங்கர் பேசியதால் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாகப் பெண் காவலர்கள் தங்களது ஆதங்கத்தை நீதிபதியிடம் தெரிவித்தனர்” என்று கூறினார்.

இதையும் படிங்க: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது... தேர்ச்சி சதவீதம் எவ்வளவு? - CBSE 10TH RESULT 2024

Last Updated :May 13, 2024, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.