தமிழ்நாடு

tamil nadu

TN Police 2022 roundup: தமிழ்நாடு காவல்துறைக்கு எப்படி அமைந்தது?

By

Published : Dec 25, 2022, 10:02 AM IST

தமிழ்நாடு காவல்துறையின் சாதனைகள், சோதனைகள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

tamil-nadu-police-2022-roundup
tamil-nadu-police-2022-roundup

சென்னை:வருடந்தோறும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக தமிழ்நாடு காவல்துறை பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தாண்டு கஞ்சா வேட்டை, பிச்சை காரர்களை மீட்கும் ஆப்ரேஷன் மறுவாழ்வு, ரவுடிகளை ஒழிக்க மின்னல் ரவுடி வேட்டை, ஆப்ரேஷன் கந்துவட்டி உள்ளிட்ட பல திட்டங்கள் தமிழ்நாடு காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு, பல பேர் கைது செய்யப்பட்டும், வழக்கு தொடர்புடைய பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்முறையாக கஞ்சா வழக்குகளில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்தாண்டு தமிழ்நாடு காவல்துறை செய்துள்ள சாதனைகள் மற்றும் சந்தித்துள்ள சோதனைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

ஜனவரி 6:செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல் நிலையம் அருகே முன்விரோதம் காரணமாக அப்புகார்த்திக் மற்றும் மகேஷ் ஆகியோரை நாட்டு வெடிகுண்டு வீசியும், மற்றொருவரை கத்தியால் குத்தியும் மாதவன், தினேஷ், பிஸ்கட் மொய்தீன் ஆகியோர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து இருகுன்றப்பள்ளி என்ற இடத்தில் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க முயன்றபோது போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் தாக்கிய போது, காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தினேஷ், பிஸ்கட் மொய்தீன் ஆகிய இருவரையும் என்கவுண்டர் செய்தார்.

மார்ச் 16: மூன்று கொலை, கொள்ளை உட்பட 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி நீராவி முருகன், தலைமறைவாக இருந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தான். இவன் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்குவிரைந்த போலீசார் முருகனை சுற்றிவளைத்தனர். அப்போது நீராவி முருகன் கத்தியால் வெட்டியதால், உதவி ஆய்வாளர் இசக்கிராஜா நீராவி முருகனை என்கவுண்டர் செய்தார். இந்த என்கவுண்டர் அனைவராலும் பாராட்டை பெற்றது.

மே 26:31,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், ஜூலை 28ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்கவும் பிரதமர் மோடி சென்னை நேரு விளையாட்டரங்கிற்கு வருகை தந்தார். இந்த 2 நிகழ்வுகளின்போதும் எந்தவித அசாம்பாவிதங்களும் நடைபெறாமல், சிறப்பாக பாதுகாப்பு பணியை கையாண்ட தமிழ்நாடு காவல்துறைக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து வாழ்த்துகள் குவிந்தது.

ஜூலை 22: தென்னிந்தியாவில் முதல்முறையாக குடியரசு தலைவரின் சிறப்பு தனிக்கொடி தமிழ்நாடு காவல்துறைக்கு அப்போதைய துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடுவால் வழங்கப்பட்ட நிகழ்வு தமிழ்நாடு காவல்துறைக்கு வரலாற்றுமிக்க சாதனையாக கருதப்பட்டது. இந்த பேட்சை தமிழ்நாடு காவல்துறையில் உள்ள அனைத்து போலீசாரும் சட்டையில் பொருத்தி கொண்டு வலம்வருவது தனிகவுரவத்தை கொடுக்கும் என உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்டோபர் 23:கோவை உக்கடத்தில் காரில் குண்டு வெடித்து ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 24 மணி நேரத்திற்குள் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 6 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்த காவல்துறைக்கு ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். தமிழ்நாட்டில் மெட்ரோ பணியின் காரணமாக தினந்தோறும் போக்குவரத்து மாற்றங்கள் செய்து வரக்கூடிய சூழலில், அதை சிறப்பாக போக்குவரத்து காவல்துறை கையாண்டு வருவதாக பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்தாண்டு தமிழ்நாடு காவல்துறை சந்தித்த சோதனைகள்: ஜூலை 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி சந்தேகமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் ஜூலை 17ஆம் தேதி கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி சூறையாடியதுடன், காவல்துறை வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்த வன்முறை சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் பலர் உளவுத்துறை சொதப்பலால் தான் கலவரம் முன்கூட்டியே தடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டை எழுப்பியது. குறிப்பாக சமூக வலைதளங்கள் மூலமாக கலவரத்திற்கு ஆட்கள் திரட்டப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களை கண்காணிப்பதற்காக உளவுத்துறை மற்றும் நுண்ணறிவு பிரிவில் பிரத்யேக டீம் இருந்தும் கோட்டைவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பி.எப்.ஐ அமைப்பு தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அப்போது அனைத்து மாநிலங்களும் உஷார் நிலையில் இருக்கும்படி உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருந்த நிலையில், செப்டம்பர் 22ஆம் தேதி கோவை, ஈரோடு, மதுரை, சேலம் உட்பட 10 மாவட்டங்களில் தொடர்ச்சியாக பாஜக அலுவலகம், ஆர்.எஸ்.எஸ் வீடுகளில் மண்ணெண்ணை பாட்டில் வீச்சு சம்பவம் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு உளவுத்துறை சொதப்பலால் எச்சரித்தும் கோட்டைவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அக்டோபர் 23ஆம் தேதி கோவை உக்கடத்தில் காரில் குண்டு வெடித்து ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தீவிரவாதி ஜமேஷா முபின் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் என்று தெரிந்தும் தமிழ்நாடு உளவுத்துறை கண்காணிக்க கோட்டை விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் உடனடியாக என்.ஐ.ஏவிற்கு வழக்கை மாற்றாமல் காலம் தாழ்த்தியதாக தமிழக காவல்துறை மீது ஆளுநர் மற்றும் பாஜக மாநில தலைவர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

நவம்பர் 19ஆம் தேதி மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டுவெடித்து பயங்கரவாதி முகமதி ஷாரிக் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. குறிப்பாக பயங்கரவாதி ஷாரிக் உதகையை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சுரேந்திரன் என்பவரை சந்தித்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் தங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தேடப்படும் பயங்கரவாதி தமிழகத்தில் உலாவி இருப்பதை தமிழக உளவுத்துறை கண்டுக்க தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. தமிழ்நாடு காவல்துறை சாதனைகள் பல புரிந்திருந்தாலும், அதைவிட பல மடங்கு சோதனைகளை இந்தாண்டு சந்தித்துள்ளது.

இதையும் படிங்க:AIADMK 2022 Roundup: இரட்டை தலைமை விவகாரத்தில் அதிமுகவின் ஓராண்டு போக்கு

ABOUT THE AUTHOR

...view details