ETV Bharat / state

AIADMK 2022 Roundup: இரட்டை தலைமை விவகாரத்தில் அதிமுகவின் ஓராண்டு போக்கு

author img

By

Published : Dec 25, 2022, 8:56 AM IST

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக அதிமுக விவகாரங்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறிவிட்டது. மாநிலங்களவை எம்.பி சீட்டால் எழுந்த ஒற்றை தலைமை யுத்தம் குறித்தான ஒரு சிறப்புத் தொகுப்பை காணலாம்.

இரட்டை தலைமை விவகாரத்தில் அதிமுகவின் ஓராண்டு போக்கு
இரட்டை தலைமை விவகாரத்தில் அதிமுகவின் ஓராண்டு போக்கு

சென்னை: அதிமுகவில் கடந்தாண்டு இறுதியில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஒற்றை வாக்கு முறையில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டனர். அதிமுகவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் என்று இரு தலைவர்களாக இருந்ததால் உட்கட்சி தேர்தலில் சரிசமமாக பிரித்து கொண்டு நிர்வாகிகளை நியமனம் செய்தனர். ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரண்டு பேரும் "இரட்டை குழல் துப்பாக்கி" போன்று செயல்படுகின்றனர் என கூறப்பட்டது. பொங்கலுக்கு கொடுக்கப்பட்ட தொகுப்பில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது என்று ஈபிஎஸ் குற்றச்சாட்டு வைத்தார். பிப்ரவரி மாதம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக, பாமக விலகி தனித்து போட்டியிட்டது. பெரும்பாலான இடங்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இதனால் 21 மாநகராட்சியும் திமுக வசமானது.

மகளிர் தினவிழாவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ்
மகளிர் தினவிழாவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ்

வெளி தோற்றத்திற்கு மகிழ்ச்சியாக இருவரும் இருப்பதுபோல காட்டி கொண்டாலும், அதிமுக இரு அணிகளாக தான் செயல்படுகிறது என்று பேசப்பட்டது. ஓபிஎஸ் தேனியிலும், ஈபிஎஸ் சேலத்திலும் இருந்து அரசியல் செய்துகொண்டிருந்தனர். ஆளுங்கட்சியான திமுக செயல்பாடுகள் குறித்து அவ்வபோது ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதற்கிடையில் "சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை முடிவெடுக்கும்" என ஓபிஎஸ் கூறி வந்தார். இது ஈபிஎஸ் அணிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஈபிஎஸ் அணியோ, சசிகலா குறித்து யாராவது பேசினாலோ அல்லது அவரை சென்று பார்த்தாலோ அடுத்த நாளே அவரை கட்சியில் இருந்து ஓபிஎஸ் அனுமதியோடு நீக்கியது. குறிப்பாக ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா, அன்வர் ராஜா போன்ற மேல்மட்ட நிர்வாகிகளையே கட்சியில் இருந்து ஈபிஎஸ் நீக்கினார். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கலந்து கொண்டு "திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது" என ஆளுங்கட்சிக்கு சாதகமாக கருத்து தெரிவித்திருந்தார். இது அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் திமுகவுடன் சுமூக போக்கை கடைபிடிக்கிறார் என்று ஈபிஎஸ் தரப்பு மறைமுகமாக குற்றம்சாட்டியது.

முதலமைச்சர் ஸ்டாலின் உடன் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்
முதலமைச்சர் ஸ்டாலின் உடன் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்

இப்படியே இரண்டு தரப்பும் தங்களால் முடிந்த அளவிற்கு உட்கட்சி மோதலை மேற்கொண்டனர். இதனால், தமிழ்நாட்டின் பிரதான எதிர்கட்சியான அதிமுக செயல்படாத நிலையில் இருந்தது. இந்த இடைவெளியை பயன்படுத்திக்கொண்டு பாஜக எதிர்க்கட்சி போல அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டது. இதற்கு காரணம் அண்ணாமலையின் செயல்பாடுகளே என கூறப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாஜக இருந்ததால் அண்ணாமலைக்கு சுதந்திரமாக செயல்பட வாய்ப்பு கிடைத்தது. இது போன்று அதிமுகவில் இரண்டு தரப்பும் நகர்ந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், உட்கட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை கொண்டு பொதுக்குழு நடத்தி அதன் மூலம் தீர்மானம் நிறைவேற்றி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஜூன் 14ஆம் தேதி நடைபெற்றது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

பொதுக்குழு ஜூன் 23ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஜூன் 14ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் "ஒற்றை தலைமை வேண்டும்" என்ற முழக்கம் அக்கட்சிக்குள் புயலை ஏற்படுத்தியது. அன்றில் இருந்து 'ஒற்றை தலைமை' புயல் இன்று வரை ஓய்ந்தபாடில்லை. ஒற்றை தலைமைக்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறிய ஈபிஎஸ் அணி அதற்காக முயற்சியை முழுமையாக மேற்கொண்டது. கடந்த மே மாதம் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. இதில், அதிமுக சார்பாக முதலில் சி.வி.சண்முகம் மற்றும் ஜெயக்குமார் பெயர் இடம் பெற்றிருந்தது. இதற்கு, "நான் ஒரு மாநிலங்களை உறுப்பினரை நியமனம் செய்வேன்" என ஓபிஎஸ் கையெழுத்து போட மறுத்துவிட்டார். ஓபிஎஸ்சின் எண்ணப்படியே இரண்டு இடங்களில் அவருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. இதில் இராமநாதபுரத்தில் ஒன்றிய செயலாளராக இருந்த தர்மர் என்பவரை ஓபிஎஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இதில், ஈபிஎஸ் தரப்பில் சி.வி.சண்முகம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். "மாநிலங்களவை உறுப்பினராக தான் தேர்வு செய்யப்படாததற்கு ஓபிஎஸ் காரணம்" என ஜெயக்குமார் அதிருப்தியில் இருந்தார். இதனால், ஜூன்.14ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு பிறகு ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக பொது வெளியில் அறிவித்து களத்தை சூடாக்கினார். அப்போது இருந்து ஒற்றை தலைமை விவகாரம் வேகம் எடுக்க ஆரம்பித்தது.

இந்த ஒற்றை தலைமையை ஏற்க மறுத்த ஓபிஎஸ், தனக்கு தலைமை அங்கீகாரம் இல்லாமல்போய்விடும் என்ற நோக்குடன், பொதுக்குழுவை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். முதலில் பொதுக்குழு நடத்த அனுமதி அளித்த உயர்நீதிமன்றம், ஜூன்.23ஆம் காலையில், ஏற்கனவே தயார் செய்யப்பட்ட 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் சென்னை வானகரத்தில் உள்ள பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு வந்தனர். அப்போது பேசிய சி.வி.சண்முகம், "23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுகிறது" என்று ஆவேசமாக குரல் எழுப்பினார்.

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்

இதனிடையே ஓபிஎஸ் மீது பாட்டில்களை பொதுக்குழு உறுப்பினர்கள் வீசம் சம்பவங்கள் அரங்கேறியது. இதனால், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பாதியிலேயே வெளியேறினார். அதே பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த பொதுக்குழு ஜூலை.11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அந்த பொதுக்குழுவையும் தடை செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடுத்தார். அதில், பல்வேறு முறை வழக்கு விசாரணை செய்யப்பட்டு ஜூலை 11ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்தார்.

அதன்படி, ஜூலை 11ஆம் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்கினார். இந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் கலந்து கொள்ளலாமல், தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அங்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பினரிடையே வன்முறை ஏற்பட்டு அதிமுக தலைமை அலுவலகம் வருவாய்த்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

இரட்டை தலைமை விவகாரத்தில் அதிமுகவின் ஓராண்டு போக்கு
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தின் சீலை அகற்ற வேண்டும் எனவும் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எங்கள் தரப்பினரிடம் வழங்க வேண்டும் எனவும் ஈபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஈபிஎஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்று தலைமை அலுவலகத்தின் சாவியை அவர்களிடம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக தலைமை அலுவலகமும் ஈபிஎஸ் பக்கம் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடத்தலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து இரு வாரங்களில் தீர்வு காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரணை செய்ய இருந்த நிலையில், இவரை மாற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றப்பட்டது. அவர் தலைமையில் விசாரணைக்கு வந்த போது, ஜூன்.23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரும் எனவும், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கட்சி விதிப்படி நடைபெறவில்லை எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் தலைமையில் செப்டம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் எனவும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர்பாக நீங்கள் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்படி, கடைசியாக கடந்த டிச.15ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் ஜனவரி 4ஆம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்க்கு மாற்றாக திண்டுக்கல் சீனிவாசனுக்கு பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. சட்டமன்றத்தில் ஓபிஎஸ்சிடம் இருந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்பி.உதயகுமாருக்கு கொடுக்க வேண்டுமென சட்டமன்றத்தை புறக்கணித்தது மட்டுமல்லாமல் போராட்டத்திலும் ஈபிஎஸ் தரப்பு ஈடுபட்டது. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பியை அதிமுக எம்.பியாக கருத கூடாது என்று மக்களவை சபாநாயகருக்கு ஈபிஎஸ் தரப்பு கடிதம் எழுதியது. இதுபோன்று பல்வேறு விவகாரங்களில் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை உச்சகட்டத்திற்கு கொண்டு சேர்த்தது.

அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையங்களின் அறிக்கை வெளியிடப்பட்டு, மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியது. பெரியார் பிறந்தநாள், ஜெயலலிதா நினைவு நாள், எம்.ஜி.ஆர் நினைவு நாள் ஆகியவற்றில் இருவரும் தனித்தனியாக மாலை அணிவித்து மரியாதை செய்து வந்தனர். அவ்வப்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டம், ஆலோசனை கூட்டமும் இரு தரப்பினரும் நடத்தி வந்தனர். ஓபிஎஸ், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று நிர்வாகிகளை நியமித்து போட்டி பொதுக்குழுவிற்கு தயாராகி வருகிறார்.

உட்கட்சி விவகாரம் ஒருபுறம் இருந்தாலும் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு போன்ற திமுக அரசுக்கு எதிராக தமிழகம் பல்வேறு போராட்டங்களை ஈபிஎஸ் தரப்பினர் முன்னெடுத்தனர். டிச.21ஆம் தேதி நடைபெற்ற ஓபிஎஸ் தலைமையிலான மாவட்ட செயலாளர் கூட்டத்தில், ஈபிஎஸ் தனிகட்சி தொடங்கி பார்க்கட்டும். என்னுடைய மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்ததை தடுத்தவர் ஈபிஎஸ் என்று ஆவேசமாக பேசினார். இவர்களது பிரச்சனையை பாஜக மேலிடமே தீர்த்துவைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் ஈபிஎஸ், நாங்கள் மெகா கூட்டணி அமைப்போம், இது எங்கள் கட்சி விவகாரம், பாஜக வேறு கட்சி என கூறிவிட்டார். பாஜகவால் தான் தேர்தல்களில் தோல்வியை சந்தித்துவிட்டோம் என்று உணர்ந்து பாஜகவை எதிர்க்க ஈபிஎஸ் தயாராகி விட்டார் என பேசப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தின் அழைப்பிதழில் ஈபிஎஸ் பெயருக்கு பின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு பழனிசாமி தாக்கல் செய்த அதிமுகவின் 2021-22 நிதியாண்டுக்கான வரவு-செலவு கணக்கை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. இப்படி ஈபிஎஸ் பக்கம் கட்சி செல்வதுபோல நடக்கும் நிகழ்வுக்கு மத்தியில், ஓபிஎஸ் குஜராத்தில் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு சென்று காவி துண்டு அணிந்தார். இதனால் அவர் பாஜகவின் ஆதரவில் இருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது.

ஆனால், பாஜக தரப்பு பலமுறை ஈபிஎஸ்சிடம், "நீங்கள், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என வலியுறுத்தியும் அவர் கேட்க மறுத்து விட்டார் என்று கூறப்படுகிறது. ஒற்றை தலைமை விவகாரம் தொடங்கிய போது இரண்டு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்தியும் அதில் தீர்வு எட்டப்படவில்லை. பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக பிளவுபட்டிருப்பது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என அரசியல் விமர்சகர்கள் கூறிக்கொண்டே வருகின்றனர். 2023ஆம் ஆண்டிலாவது அதிமுக ஒன்றிணையுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இது நடக்கவில்லை என்றால் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை முடக்கப்படும் வாய்ப்புள்ளது என்றும் இரு அணிகளும் தனியாக வேட்பாளர்களை நிறுத்தும் சூழல் ஏற்படும் என்றும் அரசியல் விமசர்கள் தெரிவிக்கின்றனர். இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: திமுகவுக்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்.. கரூர் தேர்தலில் திடீர் மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.