தமிழ்நாடு

tamil nadu

இரட்டை இலைச் சின்னம் எங்களுக்கு தான்; ஏ.சி. சண்முகத்தை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி

By

Published : Jan 24, 2023, 10:14 PM IST

இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான்; ஏசி சண்முகத்தை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி

'ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்' என புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை சந்தித்த பின் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக, இடைத்தேர்தல் தொகுதியை காங்கிரஸ்-க்கு ஒதுக்கியுள்ளது. இதில் முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அதிமுக கூட்டணியில் ஒற்றைத் தலைமை விவகாரம் இருப்பதால் குழப்பமான சூழ்நிலையே நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. அதிமுக கூட்டணி கட்சிகளை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் தனித்தனியாக சந்தித்து ஆதரவு கோரும் சம்பவங்கள் தினம்தோறும் அரங்கேறி கொண்டிருக்கிறது.

அந்த வகையில் நேற்று(ஜன.23) ஈபிஎஸ் அணியினர் சென்னையில் உள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தை சந்தித்து ஆதரவு கோரி இருந்த நிலையில் இன்று(ஜன.24) ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினர் சந்தித்தனர். சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். ஏற்கனவே கூறியது போல ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக வேட்பாளரை நிறுத்துவோம். விரைவில் வேட்பாளர் பெயரை அறிவிப்போம்.

பாஜக இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு ஆதரவாக அதிமுக செயல்படும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். கண்டிப்பாக, இரட்டை இலை சின்னம் எங்கள் அணிக்கு தான் கிடைக்கும். நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர். அப்படி தான் இந்திய தேர்தல் ஆணையத்தில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி கையொப்பம் இல்லாமல் இரட்டை இலைச் சின்னம் எங்களுக்கு கிடைக்கும். இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துவிட்டார்" எனக் கூறினார்.

புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்

பாஜக தலைமையகமான கமலாலயம் செல்ல மாட்டேன் என உறுதி அளித்துவிட்டு தற்போது ஓபிஎஸ் அங்கு சென்றுள்ளார் என அமைச்சர் உதயநிதி விமர்சனம் செய்திருந்தார். அதற்குப் பதிலளித்த ஓபிஎஸ், "சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின், கமலாலயம் செல்ல வேண்டாம் எனக் கூறியிருந்தார். நான் அதற்கு நான் எப்போதும் எம்.ஜி.ஆர் மாளிகையை நோக்கி தான் செல்வேன் எனக் கூறினேன். நான் கமலாலயம் செல்ல மாட்டேன் எனக் கூறவில்லை" என கூறினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவு கோரினார். நான் தேசிய ஜனநாயக கூட்டணி என்ன நிலைப்பாட்டை எடுக்கிறதோ அதை நாங்கள் ஆதரிப்போம். முடிந்த அளவிற்கு அதிமுகவை ஒன்றிணைக்க நான் பாலமாக செயல்படுவேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த போது, நான் அவருடைய ரசிகனாக அதிமுகவில் செயல்பட்டவன். இரண்டு தரப்பிடமும் ஒன்றிணையுங்கள் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன்.

1989ஆம் ஆண்டு ஜானகி, ஜெயலலிதா இடையே நடந்த விவகாரத்தை ஓபிஎஸ்-ஸிடம் சுட்டிக்காட்டினேன். இது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் ஏற்கனவே பேசி இருக்கிறேன். நான் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை" எனக் கூறினார்.

இதையும் படிங்க: காங்கிரசுக்கு கை கொடுப்பாரா கமல்ஹாசன்; நாளை கூடுகிறது மநீம செயற்குழு கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details