தமிழ்நாடு

tamil nadu

ஆளுநர் அழைப்பை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வாரா?

By

Published : Jan 25, 2023, 10:51 PM IST

Etv Bharat

தமிழ்நாடு ஆளுநர் தேநீர் விருந்தை, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டப் பல்வேறு கட்சிகள் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் ஆளுநர் அழைப்பை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வாரா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை: 'தமிழ்நாட்டு மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள், ஆளுநர் விருந்து அல்ல, எந்த விருந்திலும் பங்கேற்கமாட்டார்கள்’ என காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டி அளித்துள்ளார். மேலும் ஆளுநர் தேநீர் விருந்தை காங்கிரஸ் புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளன.

ஆளுநர்- முதலமைச்சர் முரண்பாடு:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து ஆளும் தரப்புடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். மேலும் அவரை பொறுத்தவரை, தி.மு.க. அரசின் திராவிட மாடல் என்ற பெருமிதம், இரு மொழிக் கொள்கை, இந்தி எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு போன்றவை உவப்பிற்குரியதாக இல்லை.

ஆகவே, கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அரசை விமர்சிக்க ஆளுநர் தவறுவதில்லை. இந்நிலையில் மோதலின் உச்சகட்டமாக கடந்த ஜனவரி 9-ம் தேதி நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில், ஆளுநர் ரவி, தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டிருந்த உரையில் சிலவற்றைப் படிக்காமல் தனது சொந்தக் கருத்தை பதிவிட்டதால் திமுக அரசுக்கும் அவருக்குமான பகை வெளிப்படையாக வெளியில் தெரிந்தது.

மேலும் ஆளுநர் ஆர்.என். ரவியை மாற்ற வேண்டுமென ஒரு முறை மக்களவையிலேயே தி.மு.கவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு பேசினார். பிறகு, கடந்த நவம்பர் மாதத்தில் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்குச் சென்ற தி.மு.க. எம்.பிக்கள், ஆளுநர் ஆர்.என். ரவியை மாற்றவேண்டுமென மனு ஒன்றை அளித்தனர்.

'தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என ஒருவர் (ஒருவன் என பேசினார்) புலம்பிக் கொண்டிருக்கிறாரே... அதற்கு மேல் விளம்பரம் கொடுக்க வேண்டாம்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜனவரி 14-ம் தேதி, திராவிட மாடல் பயிற்சிப் பாசறை -2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழாவில் பேசியது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் குடியரசு தின விழாவையொட்டி நாளை (26.01.2023) மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று தொலைபேசியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஆளுநரின் செயலாளர் நேரில் வந்து முதலமைச்சருக்கு அழைப்பிதழை வழங்கினார்.

குடியரசு தின விழாவில் அருகருகில் ஆளுநர், முதலமைச்சர் ஸ்டாலின்:திமுக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து ஆளுநர், திமுக அரசுடன் இணக்கம் காட்டாத சூழ்நிலை பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன. இந்நிலையில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில், ஆளுநர் ரவி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, உரையாற்ற உள்ளார். இதில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, நாளை முதலமைச்சர் ஸ்டாலினும், ஆளுநர் ரவியும் அருகருகே அமரும் சூழல் உள்ளது.

இந்நிலையில் நீட் மசோதா, ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாவிற்கு, ஆளுநர் பல நாட்கள் ஆகியும் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்ட உள்ள காரணத்தால், திமுகவின் கூட்டணி கட்சிகள், தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்களா? இல்லை புறக்கணிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: வேங்கைவயல் விவகாரம்: பிறகட்சிகளை குற்றம் சொல்ல திருமாவுக்கு தகுதியில்லை - சீமான்

ABOUT THE AUTHOR

...view details