வேங்கைவயல் விவகாரம்: பிறகட்சிகளை குற்றம் சொல்ல திருமாவுக்கு தகுதியில்லை - சீமான்

author img

By

Published : Jan 25, 2023, 7:44 PM IST

குற்றம் சொல்ல திருமாவளவனுக்கு தகுதியில்லை - சீமான்

வேங்கைவயல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நடந்த விவரங்களை கேட்டறிந்த சீமான், ஓட்டு வங்கி அரசியலுக்காக திட்டமிட்டே தமிழக அரசு குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டினார்.

வேங்கைவயல் விவகாரம்: பிறகட்சிகளை குற்றம் சொல்ல திருமாவுக்கு தகுதியில்லை - சீமான்

புதுக்கோட்டை: வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து முழுமையாக அறிய, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் சென்றார்.

அப்பகுதியை பார்வையிட்ட அவர் அப்பகுதி பொதுமக்களை சந்தித்து நடந்த விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் ஆதாயத்திற்காக, பிற சமூக மக்களின் ஓட்டு வங்கி அரசியலுக்காக திட்டமிட்டே தமிழக அரசு குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

சம்பவம் நடந்து 30 நாட்கள் ஆகியும் இதுவரையில் காவல் துறையும் சிபிசிஐடியும் ஏன் குற்றவாளிகளை கைது செய்யவில்லை? இந்த விவகாரத்தில் பிற கட்சிகளை குற்றம் சொல்ல, விசிக தலைவர் திருமாவளவனுக்கு தார்மீக அடிப்படையில் தகுதியில்லை. அவர் கூட்டணியில் இருக்கும் கட்சி முதலமைச்சரிடம் ஏன் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பவில்லை? அல்லது நான் முன்னெடுத்த இது போன்ற பல பிரச்னைகளுக்கு எங்களுடன் அவர் களத்தில் நின்றாரா?

தமிழ்நாட்டை பெரியார் மண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதி இந்த அரசுக்கு இல்லை. சமூக நீதி என்ற வார்த்தை செத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வேங்கை வயல் கிராம மக்களைப் பொறுத்தவரையில் பொது குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டும் என்பது தான் அவர்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.

நான் முதலமைச்சராக இருந்திருந்தால் இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்து சிறையில் அடைத்திருப்பேன். இது பெரியார் மண், சமூக நீதிக்கான மாநிலம் என்று கட்டமைத்திருப்பது எல்லாம் இந்த ஆட்சியாளர்களின் ஏமாற்று வேலை” என்று கூறினார்.

இதையும் படிங்க: உலக தமிழ் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.