தமிழ்நாடு

tamil nadu

Imran Khan Arrest : இம்ரான் கைதால் இந்தியாவுக்கு பாதிப்பா? ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் திட்டமா?

By

Published : May 11, 2023, 10:33 PM IST

இம்ரான் கான் கைது நடவடிக்கையால் ஏற்பட்டு உள்ள அமைதியின்மை, வன்முறை, நிர்வாகச் சிக்கல்கள், அதைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிடும் ராணுவம், இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா என பாகிஸ்தான் நிலவரங்கள் குறித்து விவரிக்கிறார், ஈடிவி பாரத் செய்தி ஆசிரியர் பிலால் பட்.

Pakistan
Pakistan

ஐதராபாத் : எதிர்ப்பு அரசியல் ஈடுபடும் தலைவர்களை நாடு கடத்துவது, தூக்கில் இடுவது, சிறையில் அடைப்பது, வீட்டுக் காவலில் வைப்பது தான் பாகிஸ்தான் அரசியலின் வரலாற்று அம்சங்களாக காணப்படுகிறது. இந்த முடிவில்லா அம்சத்தின் புது அங்கமாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இணைந்து உள்ளார்.

அரசுக்கு எதிராக பல்வேறு ஊறுவிளைக்கும் கருத்துகளை வெளியிட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்கின் விசாரணைக்கு ஆஜராக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, அந்நாட்டு அதிவிரைவுப் படையினர் கைது செய்தனர். உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். நடப்பாண்டின் இறுதியில் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பலம் வாய்ந்த எதிரியை கலங்கடிப்பதற்காக இம்ரான் கான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

ஷெபாஸ் ஷெரிப் தலைமையிலான அரசு, இம்ரான் கானின் கைது மூலம் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கு அரசியல் ரீதியிலான நெருக்கடியை வழங்கத் திட்டமிட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. வரவிருக்கும் தேர்தலில் இம்ரான் கான் போட்டியிடாமல் இருப்பதை உறுதி செய்ய எல்லா முயற்சிகளும் எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

ஏதாவது ஒரு வழக்கில் இம்ரான் கான் தண்டனை பெற்றால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகும் என்பதால் அதற்கான நடவடிக்கையில் ஷெபாஸ் ஷெரிப் தலைமையிலான ஆட்சி ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இம்ரான் கைது செய்யப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.

அதேநேரம், இதை எதிர்பார்த்து தான் இம்ரான் தரப்பு முன்கூட்டியே தேர்தலை நடத்த அழுத்தம் கொடுத்து வந்து உள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் மற்றும் அரசுக்கு இடையிலான மோதல் காரணமாக தடைபட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு காலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின், மறுமுகமாக இருந்த இம்ரான் கான், தற்போது அவர்களாலே கைது செய்யப்பட்டு இருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல் தங்களது அபிமானியாக இருந்த இம்ரான் கைது செய்யப்பட்டதற்கு ஆப்கானிஸ்தான் தாலிபன்களும் மவுனம் காப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. உய்குர் முஸ்லீம்கள் விவகாரத்தில், சீன அரசாங்கத்திற்கு நெருக்கமாக இம்ரான் கான் இருந்தார். இம்ரானுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், தற்போது பாகிஸ்தான் ராணுவத்தை சீனா பாராட்டுகிறது.

பாகிஸ்தானில் நடப்பது ஒன்றும் புதிதல்ல என்பதாலும் கூட சீனா இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வரலாம் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோ, தன்னை கடுமையாக விமர்சித்ததற்காக இஸ்லாமிய அறிஞர் அஹ்மத் ரசா கானை கொலை செய்ய உத்தரவிட்டதாக சிறையில் அடைக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவங்கள் பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் அரங்கேறி உள்ளன.

இதில் அஹமத் ரசா கானுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் அவரது தந்தை முகமது அகமது கான் கசூரி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் அகமது ராசா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதேபோல், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவும் அரசுக்கு எதிராக கண்டனக் கோஷம் எழுப்பியதாக கைது செய்யப்பட்டு, மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

மற்றொரு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஹுசைன் சுஹ்ரவர்தி, இராணுவ ஆட்சியை ஏற்க மறுத்ததற்காக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவ கவிழ்ப்பை விரும்பாத நிலையில் ஹுசைன் சுஹ்ரவர்தி அதே ராணுவத்தால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.

அதேபோல், ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரப் கூட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தினார். இறுதியில் கடந்த பிப்ரவரி மாதம் துபாய் மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வந்த முஷாரப் உயிரிழந்தார். புகழ் பெற்ற பிரான்ஸ் கவிஞர் Franz omar Phenon எழுதிய, "Wretched of the Earth" என்ற புத்தகத்தில் "ஒடுக்கப்பட்ட மக்கள் சர்வாதிகாரத்தை முத்தமிட வேண்டும் என ஆசை கொண்டு இருப்பதாக" எழுதி உள்ளார்.

அப்படி, பிறரை சர்வாதிகாரம் என்ற பாணியில் துன்புறுத்திய பாகிஸ்தானின் பல பிரதமர்களுக்கு இந்த கருத்து பொருந்துகிறது. பாகிஸ்தானின் தற்போதைய நிலைமையில் கருத்தில் கொள்கையில், ஏற்கனவே பெரும் கடன்கள் அதனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பணவீக்கம் 47 சதவீதமாக உயர்வு என பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து உள்ளது.

சர்வதேச கடன் உதவித் திட்டத்தின் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி பெறுவதில் நிலவும் சிக்கல் உள்ளிட்ட நெருக்கடியின் காரணமாக பாகிஸ்தான் அரசு விழி பிதுங்கி காணப்படுகிறது. அதேநேரம் அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 290 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுவதால் அந்நாட்டின் அந்நிய செலாவணி ஆட்டம் கண்டு உள்ளது.

இம்ரான் கான் 8 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் அமைதியின்மை மற்றும் வன்முறையால் பொதுச் சொத்துக்களுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது. கைபர் பக்துன் கா, பலுசிஸ்தான், பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பெரும் செல்வாக்கை பெற்று உள்ளதால், அவர் மீதான தடுப்பு காவல் நீட்டிக்கப்படும் பட்சத்தில் நாட்டின் அமைதி பெரும் கேள்விக் குறியை சந்திக்கும் எனக் கூறப்படுகிறது.

இம்ரான் கான் கைது, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தான் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளது. ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன், பாகிஸ்தான் ராணுவம் காட்டும் நெருக்கம், பலுசிஸ்தான் உள்ளிட்ட எல்லையோர மாகாணங்களில் உள்ள பழங்குடியின மக்களிடம் இம்ரான் கான் கொண்டு உள்ள செல்வாக்கு உள்ளிட்ட காரணங்கள், அந்நாடுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா மற்றும் சீனாவுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்தப் பிரச்னையில் சீனா நேரடியாக தலையிடாமல் நெருக்கடியை தவிர்க்க முயற்சிக்கும். ஏனென்றால் பழங்குடியின மக்கள் பகுதியில் ஏற்படும் எந்த விதப் பாதிப்பும் சீனா - பாகிஸ்தான் இடையிலான பொருளாதார வழித்தடத்தை பாதிக்கும் என்பது தற்போதைய பிரச்னையாக சீனா கருதுகிறது.

அதேநேரம், தற்போதைய அரசியல் நெருக்கடியை கட்டுக்குள் கொண்டு ராணுவ தலைமையும், எல்லைக் கட்டுப்பாடு கோடுக்கு திசை திருப்பும் என்பதால், சீனா மிக கவனமாக காய் நகர்த்தும் என்பதை பொருத்து இருந்து காண முடியும். நாட்டின் நிலவும் அரசியல் நெருக்கடியை சமாளிக்க அரசுக்கு இரண்டு வழிகள் மட்டுமே இருப்பதாக கருதப்படுகிறது.

ஒன்று, தற்போதைய நிலையில் இருந்து பின்வாங்கி இம்ரான் கானை விடுவிப்பது. ஆனால் அதை தற்போதைய அரசு நிச்சயமாக விரும்பாது என தெரிகிறது. மற்றொன்று வருவதை பார்த்துக் கொள்ளலாம் என எல்லா பிரச்னைகளுக்கும் தயாராக இருப்பது. இம்ரான் கானின் அமைச்சரவையில் அங்கம் வகித்த பெரும்பாலான அமைச்சர்கள் அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால், பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் வரலாற்றை திருப்பிப் போடும் வகையில், கடந்த காலங்களில் ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சூழல்கள் தற்போதும் நிகழ்வது போல் தெரிகிறது. அப்படி ஒரு சூழல் உருவாகும் பட்சத்தில் ராணுவ தளபதி அயூப் கான் முதல் தளபதி அசிம் முனீர் வரை கண்ட வரலாற்றை பாகிஸ்தான் மீண்டும் காண நேரிடலாம்.

இத்தகைய களேபரங்களுக்கு மத்தியில் இம்ரான்கானை விடுவிக்கக்கோரி, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பொறுத்து இருந்து பார்க்கலாம். பாகிஸ்தானின் அரசியல் சதுரங்க விளையாட்டை....

இதையும் படிங்க :Karnataka Election: ஹிமாச்சல் பாணியில் ஆட்சியை இழக்கும் அபாயம்.. கர்நாடாக பாஜகவில் நடப்பது என்ன?

ABOUT THE AUTHOR

...view details