தமிழ்நாடு

tamil nadu

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு!

By

Published : Mar 12, 2021, 9:51 PM IST

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16ஆம் தேதிமுதல் 23ஆம் தேதிவரை நடைபெறும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அரசுத்தேர்வுத் துறை
அரசுத்தேர்வுத் துறை

சென்னை:இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில்," 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது. மே 3ஆம் தேதிமுதல் 21ஆம் தேதிவரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெறுகிறது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களான இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், உயிர் வேதியியல், செவிலியர் உள்ளிட்ட தொழில் பாடப்பிரிவுகளுக்கு நடத்தவேண்டும்.

செய்முறைத் தேர்வு உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை ஏப்ரல் 8ஆம் தேதிமுதல் 24ஆம் தேதிவரையில் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்காக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு பொதுப்பிரிவு, தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 16ஆம் தேதிமுதல் 23ம் தேதிவரை உள்ள நாள்களில் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். செய்முறைத் தேர்வு நடத்துவதற்கு முதன்மை கண்காணிப்பாளர் நியமனம் செய்யவேண்டும். வேறு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள், புறத் தேர்வர்களாகவும், அதேப் பள்ளி ஆசிரியர்களை அகத் தேர்வர்களாகவும் நியமிக்கவேண்டும்.

செய்முறைத் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநரிடம் மே 5ஆம் தேதி ஒப்படைக்க வேண்டும். இந்தத் தேர்வினை தமிழ்நாடு, புதுச்சேரியில் சுமார் ஐந்து லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details