தமிழ்நாடு

tamil nadu

நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்கள் வீடு செல்லப்போவது இல்லை - பஜ்ரங் புனியா சூளுரை!

By

Published : May 29, 2023, 10:26 AM IST

Updated : May 29, 2023, 2:25 PM IST

Wrestlers protest Going home not an option till we get justice says Bajrang Punia
நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்கள் வீடு செல்லப் போவது இல்லை - பஜ்ரங் புனியா சூளுரை!

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த விவகாரத்தில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பியுமான பிர்ஜ் பூஷன் ஷரண் சிங் கைது செய்யப்பட வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோர் போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி:மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிர்ஜ் பூஷன் ஷரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாலியல் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், கடந்த பல நாட்களாக, மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று ( மே 28) புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டு இருந்த நிலையில், அதை நோக்கி, மல்யுத்த வீரர்கள் பேரணி செல்ல முயன்றனர்.

இந்நிலையில், டெல்லி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட அவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தி, கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், நீதி கிடைக்கும் வரை,தாங்கள் வீடு திரும்பப் போவது இல்லை, தங்களது இந்த போராட்டம் தொடரும் என்று, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மீண்டும் தெரிவித்து உள்ளார்.

ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 109 பேர் உள்ளிட்ட 700 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி போலீஸ் உயர் அதிகாரி கூறியதாவது, “பிரிவுகள் 188 (அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்), 186 (பொதுப் பணிகளைச் செய்வதில் அரசு ஊழியரைத் தடுப்பது), 353 (அரசு ஊழியரைத் தடுக்க குற்றவியல் சக்தியைத் தாக்குதல் அல்லது பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) 332 (பொது ஊழியரை தனது கடமையிலிருந்து தடுக்கும் வகையில் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின்படி”, இவர்கள் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (மே 28) இரவு, பத்திரிகையாளர்களை சந்தித்த பஜ்ரங் புனியா கூறியதாவது, "நாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், எங்கள் சகோதரிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். ஜனநாயகம் தவறான வழியில் செல்வதாக சென்று கொண்டு இருக்கிறது. எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை வீடு திரும்புவது சாத்தியமில்லை. நான்தான் கடைசியாக விடுதலை செய்யப்பட்டேன். மீதமுள்ள மல்யுத்த வீரர்களை நான் சந்திப்பேன், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் விரைவில் முடிவு செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவரை கைது செய்யக் கோரியும் ஜந்தர் மந்தரில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் மற்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட நட்சத்திர மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து வெறும் மூன்று கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ள ஜந்தர் மந்தரில் உள்ள போராட்ட களத்தில், போகத் சகோதரிகள், சாக்ஷி மாலிக் மற்றும் பலர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை உடைத்து, அத்துமீறி நுழைய முயன்றபோது, போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு இருந்ததால், அங்கு குழப்பமான காட்சிகள் காணப்பட்டன.

இதனையடுத்து, உடனடியாக விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், போராட்டக்காரர்களையும், மல்யுத்த வீரர்களையும் வெவ்வேறு வாகனங்களில் ஏற்றி, அழைத்துச் சென்று விட்டனர். ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் இருந்த கட்டில்கள், மெத்தைகள், கூலர்கள், மின்விசிறிகள், தார்பாலின் உறைகள் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்திய போலீசார், போராட்ட இடத்தை சுத்தம் செய்தனர்.

இதையும் படிங்க: "எப்பா.. என்னா வெயிலு" கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Last Updated :May 29, 2023, 2:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details