தமிழ்நாடு

tamil nadu

"தமிழக காவல்துறையும் உளவுத்துறையும் செயலிழந்து விட்டதா?" - போதைப்பொருள் விவகாரத்தில் ராமதாஸ் கேள்வி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 3:29 PM IST

PMK leader Ramadoss: தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வரும் விவகாரத்தில், தமிழக காவல்துறையும், உளவுத்துறையும் செயலிழந்து விட்டதா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக காவல்துறையும், உளவுத்துறையும் செயலிழந்து விட்டதா
தமிழக காவல்துறையும், உளவுத்துறையும் செயலிழந்து விட்டதா

சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருவதைக் கண்டித்து, அது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டின் பாம்பன் நகரிலிருந்து, இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட்ட ரூ.108 கோடி மதிப்புள்ள 99 கிலோ அளவிலான ஹாசிஷ் எனப்படும் போதைப்பொருளை மண்டபத்தை ஒட்டிய நடுக்கடலில் மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினரும், கடலோரக் காவல்படையினரும் இணைந்து பறிமுதல் செய்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டமும், கடத்தலும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து போதைப்பொருட்கள் தமிழ்நாட்டுக்கு கடத்தி வரப்படுவதாகவும், இங்கிருந்து இலங்கை வழியாக உலகின் பல நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை கூறியிருப்பது பல்வேறு செய்திகள் நமக்கு சொல்கின்றன.

உலக அளவிலான போதைப் பொருட்கள் கடத்தலின் மையமாக தமிழ்நாடு மாறி வருகிறது என்பதுதான் அவற்றில் முதன்மைச் செய்தி. தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்தும் பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன்.

இதையும் படிங்க:கென்யாவிற்கு சென்ற ஜாபர் சாதிக்..! உடன் சென்றவர்கள் யார்? பட்டியலைத் தேடும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு

ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. தமிழகத்திலும், தமிழகத்தையொட்டிய கடல் பகுதியிலும் கடந்த சில நாட்களில் பல்லாயிரக் கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் மத்திய அமைப்புகள் தான் செய்துள்ளதே தவிர, இதில் மாநில அமைப்புகளின் பங்களிப்பு சிறிதும் இல்லை. தமிழக காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் இது குறித்து எதுவுமே தெரியவில்லை என்றால், அந்த அமைப்புகள் செயலிழந்து விட்டன அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டு விட்டன என்று தான் கருத வேண்டியிருக்கிறது.

ஏற்கனவே மது போதையும், கஞ்சா போதையும் தமிழக இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. தற்போது, பன்னாட்டு போதைப் பொருட்களும் தமிழ்நாட்டு இளைஞர்களை குறிவைக்கத் தொடங்கியிருக்கின்றன. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு, போதைப் பொருட்களுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படிங்க:பொதிகை ரயிலில் போதைப்பொருள் கடத்திய விவகாரம்: மேலும் இருவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details