தமிழ்நாடு

tamil nadu

"கோடைக் காலத்தில் மது, புத்தகத்தைப்பிடித்தலைக் குறைத்துக் கொள்வது நல்லது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 8:45 PM IST

Minister Ma. Subramanian: மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணி மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Chennai
சென்னை

சென்னை: சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுக்கான பிரத்தியேக ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை மையத்தை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

அதேபோல் திருநெல்வேலி மாவட்டம் கண்டியப்பேரி அரசு புறநகர் மருத்துவமனை கட்டிடம், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசரக்கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு கட்டிடம், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அரசு மருத்துவமனை கட்டிடங்களையும் திறந்து வைத்தும், 1196 செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கோடைக் காலம் துவங்கி இருக்கிற காரணத்தினால் கடுமையான வெப்ப அலை பாதிப்புகளைத் தடுப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்கின்ற அறிவுறுத்தலும் விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

உடலில் நீர்ச் சத்து குறையாமல் இந்த கோடைக் காலத்தில் உடலில் உள்ள நீரின் அளவை பராமரித்துக் கொள்ள வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும். எனவே, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கத் தேவையான அளவு தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரைத் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும். ORS எலுமிச்சை சாறு, இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகளைக் குடித்தல் போன்ற அறிவுறுத்தலும் பொதுமக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பருவ கால பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை வீட்டில் சமைத்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சிறு குழந்தைகள் தொடங்கி வயதானவர்கள் வரை காலை 11 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை வெளியில் தேவையில்லாமல் வருவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

வெளியில் செல்லும்போது காலனிகள் இல்லாமல் வெளியில் செல்ல வேண்டாம். கடுமையான வெயில் தாக்கம் இருக்கின்ற சமயங்களில் கைகளில் குடைகளோடு எடுத்துச் செல்ல வேண்டும். சிறிய குழந்தைகள் மதிய வேளையில் வீட்டுக்கு வெளியில் விளையாட பெற்றோர்கள் அனுப்ப வேண்டாம்.

குறிப்பாகப் பெரிய சுற்றுலா மையங்களில் செயற்கை குளிர் பானங்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் போன்ற பழக்கங்கள் ஈடுபட்டிருப்பவர்கள் கோடைக் காலத்தில் இந்த பழக்கங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது என்ற அறிவுறுத்தலை பொதுச் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதிக வெப்பத்தினால் மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு நாம் உதவும் மனப்பான்மையினை பெற்றிருக்க வேண்டும். உடனடியாக 108 மற்றும் 104 என்ற எண்களோடு தொடர்பு கொண்டு, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்திட வேண்டும்.

கடும் வெயிலினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, உடலில் மற்றும் தலையில் தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தி, எந்த மாதிரியான பழங்களை உண்ண வேண்டும், மோர், கேழ்வரகு கூழ், இளநீர், எலுமிச்சை சாறு போன்ற பழரசங்களை உண்பது நல்லது போன்ற விழிப்புணர்வுகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணி மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 6ந் தேதி 1021 மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டது. ஏறத்தாழ 15 நாட்கள் அவர்களுக்குக் கால அவகாசங்கள் தரப்பட்டு, 85 சதவீதம் பேர் பணியில் இணைந்துள்ளனர். மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக 1196 பேருக்குப் பணி ஆணைகள் தரப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்புத் துறை தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தளங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். போலியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படும் கடைகளின் தகவல்கள் கிடைத்து வருகிறது.

கடந்த காலங்களில் கல் வைத்துப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களின் தகவல் கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக அதனைப் பரிமுதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இன்று வரை 9000 கடைகளில் பான்பராக், குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டு, அந்த கடைகள் மூடப்பட்டுள்ளது.

இதுபோன்ற கடைகளின் தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தர்பூசணி பழங்களில் செயற்கையாக நிரம் ஏற்றப்படும் செயல்கள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. கலப்படங்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:திமுகவில் இணைந்தார் தருமபுரி தொகுதி பாமக முன்னாள் எம்பி பு.த.இளங்கோவன்!

ABOUT THE AUTHOR

...view details