தமிழ்நாடு

tamil nadu

மைப்பாறை பட்டாசு ஆலை வெடி விபத்து; 40 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதம்! - Maipparai fire Accident

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 4:31 PM IST

Crackers factory fire accident damage details: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மைப்பாறை கிராமத்தில் நேற்று ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில், 20க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டம் ஆகியது. மேலும், 40க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

explosion-at-tenkasi-firecracker-factory-40-two-wheelers-destroyed-in-fire
தென்காசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 40 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதம்...

தென்காசி:தென்காசி மாவட்ட எல்லைப் பகுதியான திருவேங்கடம் தாலுகாவுக்கு உட்பட்ட மைப்பாறை கிராமத்தில், விருதுநகர் மாவட்டம், புலிப்பாறைபட்டியைச் சேர்ந்த வெங்கட்ரமணி என்பவருக்குச் சொந்தமான ஏவிஎம் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்து, சிவகாசி சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் நடத்தி வந்துள்ளார்.

இங்கு நாக்பூர் உரிமம் பெற்று, பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (மார்ச் 23) பட்டாசு ஆலையில் வழக்கம் போல 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. மதியம் பணியாளர்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது, திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், நாலாபுறமும் அலறி அடித்து ஓடினர். பட்டாசுகள் தொடர்ந்து வெடித்தது மட்டுமின்றி, அருகிலிருந்த சுமார் 10 ஏக்கர் பரப்பளவு தீப் பற்றி எரிந்தது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில், விருதுநகர், கழுகுமலை தீயணைப்பு நிலைய வண்டிகள் ஆலைக்குள் சென்று தீயை அணைக்க முற்பட்டனர். அதிக அளவு புகைமூட்டம் இருந்தது மட்டுமின்றி, தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருந்ததால், ஆலைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இருந்த போதிலும், தீயணைப்புத் துறையினர் 50க்கும் மேற்பட்டோர் உள்ளே சென்று நீண்ட போராட்டத்திற்குப் பின்பு தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில், 20க்கும் மேற்பட்ட அறைகள் முற்றிலுமாக இடிந்து விழுந்து சேதமடைந்தன.

விபத்தினைத் தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. விபத்து நடந்த பகுதி அருகே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீசார் லேசான தடியடி நடத்தி மக்களை கலைத்தனர்.‌ மேலும், பொதுமக்கள் பத்திரிகையாளர்கள் என யாரையும் ஆலை அருகே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, சங்கரன்கோவில் வருவாய்க் கோட்டாட்சியர் கவிதா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, சங்கரன்கோவில் டி.எஸ்.பி சுதிர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று, வெடி விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்த பின்னர், கட்டிட இடிபாடுகளில் யாரும் சிக்கி இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தனர். இதுவரை பணியாளர்கள் யாருக்கும் சிறு காயமோ, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும், தீயணைப்புத் துறையினர் தொடர்ச்சியாக கட்டிட இடர்பாடுகளில் யாரும் சிக்கி இருக்கிறார்களா என்பது குறித்து சோதனை செய்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டுப் பகுதியிலிருந்து தீ ஆலைக்குள் வந்ததால், வெடி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருந்த போதிலும், முழு விசாரணைக்குப் பின்னால் தான் வெடி விபத்துக்கான காரணம் தெரிய வரும். தொடர்ந்து, பட்டாசுகள் விட்டு விட்டு வெடித்து வருவதால் தீயணைப்புத் துறையினர் தரைமட்டமான இடிபாடுகளில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். நள்ளிரவில் தொடர்ந்து தீ எரிந்த நிலையில் அதிகாலையில் அந்த பகுதி முழுவதும் தற்பொழுது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ரூ.2,45,300 பறிமுதல் செய்த பறக்கும் படை; வேலையாட்களின் கூலிப் பணத்தை பறிமுதல் செய்ததாக புலம்பிய நபர் - மணப்பாறையில் பரபரப்பு - Lok Sabha Election

ABOUT THE AUTHOR

...view details