தமிழ்நாடு

tamil nadu

'பறவைக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை தேவை'- அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தல் - Bird flu H5 N1 Spread

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 1:50 PM IST

Bird flu H5 N1 Spread: தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Bird flu H5 N1 Spread in TamilNadu
பறவைக் காய்ச்சல்

சென்னை:கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் (எச்5 என்1) பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்ட ஆயிரக்கணக்கான வாத்து, கோழிகளை அழித்து வருகின்றனர். மேலும், காய்ச்சல் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பறவாமல் இருக்க கேரள எல்லையில் உள்ள தமிழ்நாட்டின் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில், “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப் படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப்பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும். பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சூறைக்காற்றுடன் மழை: தாளவாடியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம்! - Erode Rain

ABOUT THE AUTHOR

...view details