தமிழ்நாடு

tamil nadu

கேரள ஆர்எஸ்எஸ் தலைவரை கொலை வழக்கில் 15 பிஎப்ஐ நபர்களுக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் அதிரடி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 12:39 PM IST

Updated : Jan 30, 2024, 6:14 PM IST

Ranjith Sreenivasan murder case: கேரளாவில் பாஜக பிரமுகர் ரஞ்சித் சீனிவாசனை கொலை செய்த வழக்கில் 15 பேருக்கு மாவேலிக்கரா கூடுதல் சிறப்பு நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கி அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை
ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை

கேரளா:கேரளாவில் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐயுடன் தொடர்புடைய 15 பேருக்கு மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட நீதிபதி வி.ஜி.ஸ்ரீதேவி தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

கேரளா மாநிலம் ஆழப்புழாவை சேர்ந்த வழக்கறிஞரான ரஞ்சித் சீனிவாசன் பாஜக ஒபிசி அணியின் தலைவராக இருந்தார். இவர் கடந்த 2021 ம் ஆண்டு டிசம்பர் 19 ம் தேதி அவரது குடும்பத்தாரின் முன்னிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கேரளாவை உலுக்கிய இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரும் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அமைப்பை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

ஆழப்புழா மாவட்டம் மாவெலிகாராவில் உள்ள கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அவர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பேசிய சிறப்பு வக்கீல் பிரதாப் ஜி படிக்கல், இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரில் 14 பேர் மட்டுமே இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இன்று ஆஜர்படுத்தப்படாத குற்றவாளிக்கும் இந்த தண்டனை பொருந்தும் என நீதிபதி வாய்மொழியாக தெரிவித்ததாக கூறுனார்.

உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீதமுள்ள ஒரு குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதும், அவருக்கு எதிரான தண்டனை அறிவிக்கப்படும் என்றார். இதையடுத்து உயிரிழந்த பாஜக பிரமுகர் ஸ்ரீனிவாசனின் குடும்பத்தினர், இந்த தீர்ப்பால் தாங்கள் திருப்தி அடைவதாக கூறியுள்ளனர்.

தொடர்ந்து பேசிய ஸ்ரீனிவாசனின் மனைவி, “இது மிகவும் அரிதான வழக்கு, இந்த சம்பவம் குறித்து முழுமையான மற்றும் நேர்மையான விசாரணை நடத்தி, இறுதியில் அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தந்த விசாரணை அதிகாரிகளுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்"என கூறினார்.

இந்த தீர்ப்பு குறித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் கே.சுரேந்திரன், “உயிரிழந்த ஸ்ரீனிவாசனுக்கு நீதி கிடைத்தது, இறுதியில் உண்மை வென்றது.. மாபெரும் தியாகி ரஞ்சித் சீனிவாசனுக்கு இன்று நீதி கிடைத்துள்ளது.. தீர்ப்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், முழு மனதுடன் வரவேற்கிறோம்” என்று கூறினார்.

இந்நிலையில் ஒரே வழக்கில் தொடர்புடைய 15 பேருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:“ஹேமந்த் சோரனின் மனைவியை ஜார்கண்ட் முதலமைச்சராக்க உள்ளார்” நிஷிகாந்த் துபே

Last Updated :Jan 30, 2024, 6:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details