CBSE 12th தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்த வேலூர் மாணவி ரேவா!

By

Published : May 12, 2023, 8:59 PM IST

thumbnail

CBSE 12th தேர்வு முடிவுகள் 2023: CBSE 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 500-க்கு 497 மதிப்பெண் பெற்று வேலூர் மாணவி ரேவா மாநிலத்தில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு CBSE பள்ளிகளின் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில், வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஷிருஷ்டி CBSE பள்ளி என்ற தனியார் பள்ளியைச் சேர்ந்த 'ரேவா சுதர்சன் ராஜ்' என்ற மாணவி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இயற்பியல், வேதியியல் முறையே 100-க்கு 100 மதிப்பெண்களும் ஆங்கிலம், கணிதம், உயிரியல் ஆகிய பாடங்கள் முறையே 100-க்கு தலா 99 மதிப்பெண்களையும் பெற்று அசத்தியுள்ளார். மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற இந்த  மாணவிக்கு, அவரது பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் அப்பள்ளியின் குழும தலைவர் சரவணன் உட்பட ஆசிரியர்கள் அனைவரும் மாணவியை வெகுவாக பாராட்டினர். அவர்களது பாராட்டுகளைப் பெற்றுக்கொண்ட மாணவி ரேவா, 'தனது உயர்வுக்கு காரணமான ஆசிரியர்களுக்கும் நன்றி' எனத் தெரிவித்தார். 

இதேபோல, மாநில அளவில் இரண்டாவது இடத்தில் சென்னை பத்ம ஷேஷாத்திரி பள்ளியும், 3 வது இடத்தில் கோபாலபுரம் DAV பள்ளியும் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு மாணவி ரேவா சுதர்சன் ராஜ் அளித்த பிரத்யேக பேட்டியில், தான் LKG-யில் இருந்து 12ஆம் வகுப்பு வரை சிருஷ்டி பள்ளியில் படித்து வருவதாகவும், 500 மதிப்பெண்களுக்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளதாகவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

மருத்துவர் ஆவதே  லட்சியம்: தான் மாநில அளவில் முதலிடம் பெறுவேன் என நினைத்துப் பார்க்கவில்லை எனவும், நான் மாநில அளவில் முதலிடம் பிடித்ததற்கு பள்ளியின் முதல்வரும், ஆசிரியர்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மேலும் பேசிய அவர், தனது தாய் தந்தை உட்பட குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மருத்துவர் ஆவதற்காக நீட் தேர்வு எழுதி உள்ளதாகவும், மருத்துவர் ஆவது தனது லட்சியம் என்றும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.