தூத்துக்குடியில் எருமை மாடுகளை திருடிய இருவர் கைது.. சிசிடிவி உதவியுடன் தூக்கிய போலீசார்!
தூத்துக்குடி: முருகேசன்நகர் பகுதியைச் சேர்ந்தவர், உத்தண்டுராஜ் (39). இவர் கடந்த நவம்பர் 15 அன்று இரவு, தனது மாடுகளை தனது வீட்டு முன்பு உள்ள மாட்டுக் கொட்டைகையில் கட்டி வைத்துள்ளார். பின்னர் வந்து பார்க்கும்போது, அதில் இரண்டு மாடுகள் திருடு போனது தெரிய வந்துள்ளது.
இது குறித்து உத்தண்டுராஜ், நேற்று (நவ.18) அளித்த புகாரியின் பேரில், சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான வேலாயுதம் (24) மற்றும் அவரது நண்பரான மாசானமுத்து (21) மற்றும் சிலர் சேர்ந்து, இந்த மாட்டுக் கொட்டைகையில் கட்டியிருந்த இரண்டு மாடுகளை மினி சரக்கு வாகனத்தின் மூலம் திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார், வேலாயுதம் மற்றும் மாசானமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு மாடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மினி சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.