"உதயநிதிக்கு கச்சத்தீவு ஸ்பெல்லிங் தெரியுமா.?" - சி.வி.சண்முகம் காட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 8:13 AM IST

thumbnail

விழுப்புரம்: மீனவ கிராமத்தினர் பயன்பெறும் வகையில் அதிமுக அரசு கொண்டு வந்த மீன்பிடி துறைமுகத் திட்டத்தை நிறுத்தியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில், மரக்காணம் தாலுகா அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த  அழகன்குப்பம் கிராமத்தில் 19 மீனவ கிராம மக்களின் கோரிக்கையை, கடந்த ஆட்சியில் இருந்த அதிமுக அரசு 235 கோடி ரூபாய் மதிப்பில் மீன்பிடித் துறைமுகம் கட்ட அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கியது. இந்நிலையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து கட்டுமானப்பணியை தற்போதைய அரசு நிறுத்தி உள்ளது.

இதனால் கோட்டக்குப்பம், மற்றும் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 19 கிராம மீனவர்கள், விழுப்புரம் மாவட்டத்தில் 40 கி.மீட்டர் தூரம் கடல் பரப்பளவு உள்ள பகுதியில் பெரிய படகுகளை நிறுத்த எந்த வசதியும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை திமுக அரசு நிறுத்தியதாக கூறியும், விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்பட மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் திமுக அரசை கண்டித்து அம்மாவட்ட அதிமுக செயலாளரும் எம்.பியுமான சி.வி.சண்முகம் தலைமையில் மரக்காணம் தாலுகா அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார். மேலும், ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக எம்.பி சிவி.சண்முகம், "விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 4 ஆயிரம் படகுகள் பயன்படுத்தும் 50 ஆயிரம் மீனவ குடும்பத்தினர் படகுகளை நிறுத்த முடியாமலும், பராமரிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எந்த திட்டம் போட்டாலும் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் என்ன பயன் கிடைக்கும் என்று தான் திமுக அரசு நினைக்கின்றது. உதயநிதிக்கு கச்சத்தீவிக்கு ஸ்பெல்லிங் தெரியுமா? வரலாறு தெரியுமா? மதங்களை இழிவுப்படுத்தும் வேலையினை அவர் செய்து வருகிறார். மதத்தை புண்படுத்துகின்ற வேலையினை அமைச்சர் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.