ஈபிஎஸ் பங்கேற்ற விழா மேடைக்கு அருகே தீ விபத்து!
Published: May 24, 2023, 1:41 PM

காஞ்சிபுரம்: வேலூரில் நடைபெறும் அதிமுக பிரமுகர் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகத் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக இன்று வேலூர் நோக்கி காரில் சென்றார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி பகுதியில் அதிமுக மாவட்டச் செயலாளர் வி. சோமசுந்தரம் தலைமையில் அதிமுக பிரமுகர்கள் ஏராளமானோர் பூங்கொத்து கொடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர்.
அவர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு பழனிசாமி அங்கிருந்து கிளம்பினார். வரவேற்பு அளித்த கட்சியினரும் சென்றனர். எடப்பாடி பழனிசாமியும் ஏனையோரும் அங்கிருந்து கிளம்பிச் சென்ற சில நிமிடங்களில், வரவேற்பு அளிக்கப்பட்ட பகுதிக்கு அருகாமையிலிருந்த டிபன் கடையில் திடீரென மளமளவெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனை அடுத்து சம்பவ இடத்திலிருந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்புப் படை வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தில் அப்பகுதியிலிருந்த குடிசை ஒன்றை முற்றிலும் எரிந்து சாம்பலானது.மளமளவென திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதையும் படிங்க: வஉசி மைதானம் மேற்கூரை இடிந்த விவகாரம் - சீரமைப்பு செலவுகளை ஏற்கும்படி ஒப்பந்ததாரருக்கு நோட்டிஸ்!