ETV Bharat / sukhibhava

சிறந்த ஆரோக்கியம் என்றால் என்ன? உடல் மற்றும் மனம் மட்டும் தொடர்புடையதா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 7:15 PM IST

Etv Bharat
Etv Bharat

ஆரோக்கியம் என்பது ஒரு மனிதனின் உடல், மனம் மற்றும் சமூக நல் வாழ்வை உள்ளடக்கியது. இந்த மூன்று விஷயங்களையும் முடிந்தவரை நாம் சரியாக வைத்துக்கொண்டால் நீண்ட ஆரோக்கியமான, மகிழ்ச்சியான ஆயுட்காலத்தைப் பெறலாம் என்றே ஆய்வாளர்களும், வல்லுநர்களும் கூறுகின்றனர். இவற்றின் முழுமையான விளக்கத்தைப் பார்க்கலாம்.

சென்னை: ஒரு மனிதனின் நீண்ட ஆரோக்கியம் மற்றும் ஆயுட்காலத்தை அவர்களின் உடல், மனம் மற்றும் சமூக நல் வாழ்வுதான் உறுதி செய்கிறது. இதில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும் மற்ற இரண்டும் அதனைத் தொடர்ந்து தானாகவே பாதிக்கப்பட்டு விடும். ஆகையால், நாம் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு மனம் மற்றும் சமூக ரீதியான ஆரோக்கியத்தையோ, அல்லது மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி விட்டு உடல் மற்றும் சமூக ரீதியான ஆரோக்கியத்திலோ கவனம் செலுத்தி எந்தவித பயனும் இல்லை என்றே கூறலாம். மூன்று நலன்களையும் சரிசமமாக எடுத்துச் செல்லும் வாழ்வியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதுதான் இங்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

இதில் வசதி படைத்தவர்கள் மற்றும் தெய்வீக நம்பிக்கையில் ஊடுருவியவர்கள் கொஞ்சம் நிறைவுடன் இருப்பார்கள் என்றோ அல்லது அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் சாமானிய மனிதனோடு ஒப்பிடுகையில் குறைச்சலாகவே இருக்கும். காரணம் வசதியுடன் இருக்கும் நபர்களுக்குப் பொருளாதார ரீதியான சவால்கள் பெரிய அளவில் இருக்காது அதைச் சமாளிப்பது அவர்களுக்கு எளிதான ஒரு விஷயமாக இருக்கலாம்.

மேலும் அவர்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தேவையான அளவு பணத்தைச் செலவு செய்யத் தயாராக இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. அதேபோல, தெய்வீக நம்பிக்கையில் ஊடுருவிய மக்கள் மனதை நிம்மதியுடன் வைத்துக்கொள்ளவும், தங்கள் மனக் கவலைகளைக் கடவுளிடம் விட்டு விட்ட நம்பிக்கையிலும் இருப்பார்கள். இதனால் அவர்கள் மனம் அதிக அளவில் பாதிப்படையாது.

உடல் நலம் என்றால் என்ன? உடல் நலம் என்பது நோயின் அபாயத்தைக் குறைக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதை உள்ளடக்குகிறது. நல்ல உடல் ஆரோக்கியம் கொண்ட மனிதரால் மிகுந்த ஆற்றலுடனும், அறிவுடனும் செயல்பட முடியும். நோய் இல்லாத வாழ்க்கையை மனிதர்கள் வாழவே முடியாத என்ற வகையில் காலம் மாறிவிட்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் ஆரோக்கியமான மனிதன் உடற்பயிற்சி, சமச்சீர் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் போதுமான ஓய்வு எடுத்து இருக்க வேண்டும். தேவைப்படும்போது உடல் நலம் பாதிக்கப்பட்டால் அதற்குத் தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டு உடலைச் சமநிலையில் வைத்திருக்க வேண்டும்.

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கப் பின்பற்ற வேண்டியவை:

  • ஆரோக்கியமான சுகாதாரத்தை நடைமுறைப் படுத்துதல்
  • அபாயங்கள் மற்றும் விபத்துகளில் சிக்காதவாறு கவனமாக இருத்தல்
  • உடலுறவின்போது கருத்தடை பயன்படுத்துதல்
  • புகையிலை, மது மற்றும் சட்டவிரோத போதைப் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்
  • தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளுதல்
  • ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடித்தல்
  • முடிந்தவரை இயற்கையோடு ஒன்றி வாழுதல்
  • மனதைப் பதட்டம் இன்றி அமைதியாக வைத்துக்கொள்ளுதல்

இவை அனைத்தையும் நீங்கள் முறையாகப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை முடிந்தவரைப் பாதுகாக்கலாம்.

மன நலம் என்றால் என்ன? மன நலம் என்பது ஒரு நபரின் உணர்வுகள், சமூகம் மற்றும் உளவியல் நல்வாழ்வை உள்ளடக்கியதாக இருக்கிறது என, அமெரிக்காவின் டிபார்ட்மெண்ட் ஆஃப் ஹெல்த் & ஹ்யூமன் சர்வீசஸ் ஆய்வு கூறுகிறது. உடல் நலம் எந்த அளவுக்கு முக்கியமோ அதை விட ஒருபடி அதிகமாக மன ஆரோக்கியம் முக்கியம். உடல் ஆரோக்கியத்தை வரையறுப்பதுபோல மன ஆரோக்கியத்தை அவ்வளவு எளிதாக வரையறுத்துவிட முடியாது.

ஏன் என்றால் மன ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு செயல்பாடு மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும். இதைக் கண்டறிந்து அதற்குத் தகுந்தார்போல் சிகிச்சை அளிப்பது மிகக் கடினம். மன நோய்க்கு முதல் மருத்துவர் நீங்கள் தான் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு உங்கள் மன மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற சிகிச்சையை நீங்களே மேற்கொள்ள வேண்டும்.

அதிகப்படியான பாதிப்புகளை உணரும் பட்சத்தில் மன நல ஆலோசகரைப் பார்த்துப் பேச எவ்வித தயக்கமும் கொள்ளக்கூடாது. மேலும், நல்ல மன ஆரோக்கியம் என்பது மனச்சோர்வு, பதட்டம் அல்லது பிற கோளாறுகளை மட்டும் உள்ளடக்கியது அல்ல. அது ஒரு நபரின் மன வலிமை மற்றும் திறனை பொறுத்தது. இதை மருந்து மாத்திரைகள் கொண்டு பெற்றுவிட முடியாது.

மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?

  • உங்கள் வாழ்க்கையை அனுபவித்து ருசித்து வாழுங்கள்
  • கடினமான சூழல்களை எதிர்த்துப் போராடி மீண்டு வந்து மீண்டும் போராடத் தயாராகுங்கள்
  • குடும்பம் மற்றும் பொருளாதாரத்தைச் சமநிலையில் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்
  • நீங்கள் எவ்வித பிரச்சனைகள் மற்றும் பாதிப்புகள் இன்றி பாதுகாப்புடன் இருப்பதாக உணருங்கள்
  • உங்களுக்குள் இருக்கும் முழு ஆற்றலையும், மன வலிமை மற்றும் திறனை நம்புங்கள், வெளிப்படுத்துங்கள்
  • மன நலம் பாதிக்கப்பட்டால் உடல் நலனும் பாதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

ஆரோக்கியத்தில் சமூகத்திற்கும் பங்கு உண்டு.!

இந்த சமூகமும், சுற்றுச் சூழலும் மனிதர்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் உங்கள் உடல் மற்றும் மன நலம் ஆகியவை ஆரோக்கியமாக இருந்தாலும் சமூகம் மற்றும் சுற்றுச் சூழலால் ஏற்படும் தாக்கத்தால் அவை இரண்டுமே பாதிக்கப்படலாம். உடலையும், மனதையும் வேண்டுமானால் உங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் ஆனால் சமூகத்தையும், சுற்றுச் சூழலையும் உங்கள் கட்டுக்குள் வைக்க முடியாது.

சமூகம் மற்றும் சுற்றுச் சூழலால் எந்தெந்த வழியில் பாதிக்கும்? என்றால், வசிக்கும் இடம், சுற்றி உள்ள சூழ்நிலை, பொருளாதாரம், கல்வி மற்றும் வேலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அடங்கும். உங்கள் பொருளாதார நிலை சரி இல்லை என்றால் உறவுகளில் பிரச்சனை, மன நலம் பாதிப்பு, உடல் நலம் பாதிப்பு என அடுக்கிக்கொண்டே போகலாம். சாதாரண மக்கள் 95 சதவீதத்திற்கும் மேல் இது போன்ற சவால்களைத்தான் அதிகம் சந்திக்கின்றனர்.

அதேபோல், இயற்பியல் சூழல் என்பது, ஒரு பகுதியில் உள்ள கிருமிகள், மாசுபாடு உள்ளடக்கியதாக உள்ள நிலையில் அதன் பாதிப்பு உங்களையும் தாக்கும். மேலும். ஒருவரின் தனி மனிதப் பண்புகள் மற்றும் நடத்தை என்பது அவரின் நிம்மதியான வாழ்க்கைச் சூழலை அவரே கட்டமைப்பதற்கும், அவரே கெடுத்துக்கொள்வதற்கும் காரணமாக அமைகிறது. இவை அத்தனையும் உங்கள் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகவே உள்ளன.

சரி ஒட்டு மொத்த ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி: உடல் மற்றும் மன நலம் பாதிக்கப்படும் வரை காத்திருக்காமல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற இப்போதே தொடங்குங்கள். இது ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மட்டும் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய காரியம் அல்ல. உங்கள் அன்றாட வாழ்கையில் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துபவராக இருக்க வேண்டும். ஆரோக்கியம் என்பது தனிநபராகவும் சமூகமாகவும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இதை உங்கள் ஆரோக்கிய மேம்பாட்டிற்காக கடைப்பிடியுங்கள்:

  • இயற்கையான முறையில் சமச்சீர் மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள்
  • அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சியை உறுதி செய்யுங்கள்
  • 6 மாதத்திற்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளுங்கள்
  • மன அழுத்தத்தைத் திறம்பட நிர்வகிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
  • இலக்கை குறிவைத்து வாழ்க்கை நடைமுறையைத் திட்டமிடுங்கள்
  • மற்றவர்களுடனான தொடர்பிலும், பேச்சிலும், செயலிலும் கவனம் கொள்ளுங்கள்
  • வாழ்க்கையில் நேர்மறையான கண்ணோட்டத்தைப் பேணுங்கள்
  • பொருளாதாரத்தை நிர்வகிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
  • உடலுக்கும், மனதுக்கும் இடை இடையே பணியில் இருந்து ஓய்வு கொடுங்கள்

இத்தனையும் அடங்கிய ஒரு மனிதனின் வாழ்க்கை தான் முழுமையான ஆரோக்கியம் உள்ள வாழ்க்கை. இதை நாம் வாழ்கின்றோமா? வாழ என்ன செய்ய வேண்டும்? சிந்தித்துச் சிறப்பாக, உடல், மன மற்றும் சமூகம் ஆகியவை உள்ளடக்கிய ஆரோக்கியத்தைப் பெற்று வாழுங்கள்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்பருமனால் புற்றுநோயா?... பெற்றோர்களே உஷார்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.