ETV Bharat / state

'அதிக மருத்துவ மாணவர்கள் பயிலும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்!'

author img

By

Published : Dec 22, 2021, 9:07 AM IST

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இந்தியாவில் அதிக மருத்துவ மாணவர்கள் படிப்பதற்கான வசதிகள் இருப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக மா. சுப்பிரமணியன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசு 60 விழுக்காடு பங்களிப்பு, மாநில அரசு 40 விழுக்காடு பங்களிப்புடன் 390 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரியை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி முன்னிலையில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில், மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

இந்த ஆய்வில் புதிய மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள பதனிடல் அறை, பதப்படுத்திய பிரேத அறை, உடற்கூராய்வகம் உள்ளிட்ட கட்டடங்களைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளரைச் சந்தித்த மா. சுப்பிரமணியன், “இந்தியாவிலேயே 69 தனியார், அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான்.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தமிழ்நாட்டில் படிக்கும் அளவுக்கு கட்டமைப்பு உள்ளது. இந்தியாவில் அதிக மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் இருப்பது தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் எட்டு மருத்துவர்களில் கண்டிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் இருப்பார்.

இதற்காக 2006ஆம் ஆண்டு அடித்தளத்தை அமைத்தவர் கருணாநிதி. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியைக் கொண்டுவர திட்டம் வகுத்தவர் அவர். தமிழ்நாட்டில் தற்போது கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் ஆயிரத்து 450 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டுவருகிறது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “11 மருத்துவக் கல்லூரிகளில் விருதுநகர் கல்லூரி 100 விழுக்காடு பணி நிறைவுபெற்றுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத காரணத்தினாலும் வரும் ஜனவரி 2ஆம் வாரம் பிரதமர், முதலமைச்சர் ஆகியோர் மருத்துவக் கல்லூரிகளை இங்கிருந்து திறந்துவைக்கவுள்ளனர்.

ஒமைக்ரான் தொற்று பாதுகாப்பு நடவடிக்கை

ஒமைக்ரான் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக ஏற்கனவே முதலமைச்சர் உத்தரவின்பேரில் பன்னாட்டு விமான நிலையங்களில் விதிமுறைகளை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 98 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருந்ததாகக் கருதி மரபியல் ஆய்வுக்கூறுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

அவற்றில் 13 பேரின் மாதிரிகளின் முடிவு கிடைக்கப்பெற்றதில் ஒருவருக்கு மட்டுமே ஒமைக்ரான் முதற்கட்ட அறிகுறி மட்டும் உள்ளது. எட்டு பேருக்கு டெல்டா வைரஸ் அறிகுறி இருக்கிறது. நான்கு பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் எட்டு கோடியே ஏழு லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவற்றில் முதல் தவணை 84 விழுக்காடு பேருக்கும், இரண்டாம் தவணையாக 55 விழுக்காடு பேருக்கும் போடப்பட்டுள்ளது.

தற்போது நாளொன்றுக்கு மூன்று லட்சத்து 25 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் அதிகம் பரவினால் அதை எதிர்கொள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

செய்தியாளரைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்

அத்தோடு ஆயிரத்து 400 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் தயாராக உள்ளது. பேரிடர் காலத்தில் தற்காலிகமாகப் பணியாற்றிய முன்களப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யாமல் முதலமைச்சரின் உத்தரவுக்கு இணங்க அவர்களுக்குப் பணி நீட்டிப்பு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்திற்கு ஏழாயிரம் பணிக்கு 60 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த மனுக்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்துவருகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: ரூ.100 கோடி மதிப்பில் தனி கூட்டு குடிநீர் திட்டம் - அமைச்சர் கே.என் நேரு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.