ETV Bharat / state

விழுப்புரத்தில் நித்தியானந்தாவிற்கு பிரம்மாண்ட சிலை - உருவாகிறதா மினி கைலாசா ?

author img

By

Published : Jul 12, 2022, 8:18 AM IST

விழுப்புரம் அருகே நித்யானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் 18 அடி உயரத்தில் நித்யானந்தாவுக்கு பிரம்மாண்ட சிலையை உருவாக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே 18 அடி உயரத்தில் நித்தியானந்தாவிற்கு பிரம்மாண்ட சிலை
விழுப்புரம் அருகே 18 அடி உயரத்தில் நித்தியானந்தாவிற்கு பிரம்மாண்ட சிலை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பெரம்பை கிராமத்தில் ஐஸ்வர்யா நகரில் நித்யானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசியாவில் உள்ள முருகன் கோவில் போன்று தான் வசிக்கும் ஊரில், மறைமுகமாக திரையை போர்த்தி ஒரு கோவிலைக் கட்டி வந்துள்ளார்.

27 அடியில் முருகன் சிலை பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு, இதற்கு பத்துமலை முருகன் கோவில் என பெயரும் சூட்டப்பட்டு நேற்று (ஜூலை 11) காலை கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதற்கிடையில், கோவிலின் உள்ளே நுழையும்போது 18 அடி உயரத்தில் நித்யானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை ஒன்று உருவாக்கப்பட்டு, அந்த சிலைக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

கும்பாபிஷேகத்தை முடித்து முருகனை வழிபட கோவிலின் உள்ளே சென்ற போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நித்தியானந்தாவின் சிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நித்யானந்தா சிவன் போல் வேடம் அணிந்து கையில் சூலத்துடன் தோன்றிய காட்சியைப் போல் இந்த சிலை இருந்தது.

இதுகுறித்து, கோவிலில் கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியார்களிடம் பொதுமக்கள் சிலர் கேட்டபோது, "இது சிவனின் மற்றொரு அவதாரமான கால பைரவரின் சிலைதான். கால பைரவரின் கருவூல சிற்ப ஸ்தபதி, சிலை கைவினைக்கலைஞர்கள் முறையாக அதை வடிவமைக்கவில்லை. இதனால், இத்தகைய உருவம் சிலைக்கு ஏற்பட்டுவிட்டது" எனக் கூறினர்.

விழுப்புரம் அருகே 18 அடி உயரத்தில் நித்தியானந்தாவிற்கு பிரம்மாண்ட சிலை

பின்னர், கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் அறையை பார்த்தபோது, அறை முழுவதும் நித்யானந்தா அவருக்கு ஆசி வழங்கும் புகைப்படம், நித்யானந்தா புகைப்படம் ஓவியமாக தீட்டப்பட்டது போன்ற பல புகைப்படங்கள் இருந்துள்ளன. ஏற்கனவே, நித்யானந்தாவின் படங்களை வைத்து அவர் பூஜித்து வந்ததும் தெரியவந்தது.

கும்பாபிஷேக அழைப்பிதழில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் சிவசங்கர், கே.எஸ்.பி. ரமேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகத்திற்கு வந்த ஒரு சில பக்தர்கள் நித்தியானந்தாவின் சிலை முன்னே நின்று, தங்களை புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தான் சிவனின் மறு அவதாரம் என்று கூறிக்கொண்டும், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநில காவல் துறையினராலும் இன்று வரை தேடப்படும் நபருமான நித்தியானந்தா குறித்த செய்திகள் இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலம். நடிகை ப்ரியா ஆனந்த், தான் நித்தியானந்தாவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என சமீபத்தில் கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், நித்யானந்தாவின் சீடரான பாலசுப்ரமணியம் முருகன் கோவிலை கட்டி, அங்கு 18 அடியில் நித்யானந்தாவின் சிலையை நிறுவி கும்பாபிஷேகமும் செய்த சம்பவம் விழுப்புரம் மட்டுமல்லாது அண்டை மாநிலமான புதுச்சேரி பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கல்லூரிக்கும் தன்னுடன் பயின்ற சக மாணவர்களுக்கும் திருஷ்டி கழித்த மாணவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.