ETV Bharat / state

அரசு காப்பகத்தில் மீண்டும் 5 சிறார்கள் தப்பியோட்டம்..? - வேலூர் ஆட்சியர் அளித்த விளக்கம்!

author img

By

Published : Apr 14, 2023, 8:11 AM IST

ஜாமின் தர மறுப்பால் ரகளையில் ஈடுபட்ட சிறார் கைதிகள்!..
ஜாமின் தர மறுப்பால் ரகளையில் ஈடுபட்ட சிறார் கைதிகள்!..

வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்திலிருந்து தப்ப முயன்ற 5 சிறார்கள், கட்டிடத்தின் மீது ஏறி துணியை கொளுத்தி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜாமின் தர மறுப்பால் ரகளையில் ஈடுபட்ட சிறார் கைதிகள்!..

வேலூர்: சமூக நலத்துறையின் கீழ் அரசு பாதுகாப்பு இல்லம் வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு, பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்படும் 16 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அடைக்கப்படுகின்றனர். மேலும், 21 வயதிற்கு பிறகு அவர்கள் வழக்கமான சிறைச் சாலைகளுக்கு மாற்றப்படுவர். அதன்படி, வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் தற்போது 42 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து, 17 வயது சிறுவன் உள்பட 6 இளைஞர்கள் கடந்த மார்ச் 27-ஆம் தேதி இரவு, பணியில் இருந்த பாதுகாப்பு இல்ல கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், தலைமை பாதுகாவலர் உட்பட 5 பேரை தாக்கிவிட்டு சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்றனர். இந்த தாக்குதலில் பாதுகாவலர் குமாரவேலுக்கு பலத்த காயமும், மற்ற 4 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

தப்பிச்சென்ற இளைஞர்களை பிடிக்க, 3 தனிப்படை அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், ஒரு சிறுவன் உட்பட 4 இளைஞர்கள் சென்னையில் பிடிபட்டனர். ஒருவர் சேலத்தில் இளஞ்சிறார் நீதிக்குழும நீதிபதி முன்பு சரணடைந்தார். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த 6 இளைஞர்கள் தப்பித்த பின் அதற்கு அடுத்த நாளான, ஏப்ரல் 28-ம் தேதி பாதுகாப்பு இடத்தில் A பிளாக்கில் இருந்த இளம் கைதிகள் ரகளையில் ஈடுபட்டு அங்கிருந்த மின்விசிறி, நாற்காலி, மிக்சி, விளையாட்டு உபகரணங்கள், தட்டு உள்ளிட்டவற்றை உடைத்தனர். இது தொடர்பாக 12 பேர் மீது வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், இரண்டு முறை தங்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டதாகவும், உடனடியாக தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனக் கூறி நேற்று (13.04.2023) மாலை சுமார் 7.30 மணிக்கு, பாதுகாப்பு இடத்திலிருந்த சிலர் கட்டிடத்தின் மீது ஏறி தொடர் ரகளையில் ஈடுபட்டு, துணிகளை கொளுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் 5 பேர் தப்பியோடியுள்ளனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு இட பாதுகாவலர்கள், காவல் துறையினர் இணைந்து அடுத்த அரை மணி நேரத்தில் 5 பேரையும் மடக்கி பிடித்து ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், எஸ்.பி ரேஜேஷ் கண்ணண், DRO ராமமூர்த்தி உள்ளிட்டோர் ரகளையில் ஈடுபட்ட இளம் சிறார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கீழே இறக்கினர். பின்னர் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அளித்த பேட்டியில்,"உடைமைகளை சேதப்படுத்தியதாக 12 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, வழக்கு நடைபெற்று வருகிறது. இன்றும் அவர்கள் ஜாமினுக்காக போன நிலையில், அவர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. இதில், சட்டத்தின் கடமை தான் செய்து வருகிறார்கள்.

ஆனால், இவர்கள் தங்களுக்கு ஜாமின் வேண்டும் என்பதற்காக மேலே ஏறி அடம் பிடித்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். பின்னர், நானும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி எச்சரிக்கை விடுத்த பிறகு கீழே இறங்கி வந்தார்கள். அவர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டுள்ளது. யாரும் இங்கிருந்து தப்பிச் செல்லவில்லை அனைவரும் உள்ளே தான் இருக்கிறார்கள்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 8 மணி நேரத்திற்கும் மேலாக அமரர் ஊர்திலேயே காக்க வைக்கப்பட்ட சடலம் - சுடுகாடு இல்லாததால் அவலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.