ETV Bharat / state

திருச்சியில் அனுமதியின்றி ஸ்பா நடத்திய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது!

author img

By

Published : Jul 29, 2023, 6:48 PM IST

vijay makkal iyakkam
செந்தில்குமார்

திருச்சியில் அனுமதியின்றி ஸ்பா நடத்திய தளபதி விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் செந்தில் குமார் கைது செய்யப்பட்டார்.

திருச்சி: தமிழ்நாடு அரசியலில் நடிகர் விஜய் விரைவில் அடி எடுத்து வைப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக சத்தம் இல்லாமல் செய்து வருவதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை அழைத்து அவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடத்தினார்.

முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டு சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர். இந்நிலையில் அடுத்த கட்டமாக காமராஜர் பிறந்த நாளன்று 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பாடசாலை அமைத்து ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவ வேண்டும் என விஜய் தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக “தளபதி விஜய் பயிலகம்” தொடங்கி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, திருச்சியில் விஜய் மக்கள் இயக்க மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருக்கக்கூடிய செந்தில்குமார் பல்வேறு திட்டங்களையும் தொடர்ந்து செய்து வருகிறார். நடிகர் விஜய் அரசியலுக்கு நிச்சயம் வருவார், அவருடைய முதல் மாநாடு திருச்சியில் நடக்கும், திருச்சி என்றாலே ஒரு திருப்புமுனை தான். அதன் அடிப்படையில் மாநாடு திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

அதே சமயம், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்த் திருச்சிக்கு அவ்வப்போது வருகை தந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார். இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக செந்தில்குமார் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திருச்சி கருமண்டபம் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விபச்சார தடுப்பு பிரிவு (பொறுப்பு) காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் கருமண்டபம் சிங்கராயர் நகரில் செயல்பட்டு வரும் ஷைன் ஸ்பாவிற்கு(shine spa) சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த ஸ்பா அனுமதி பெறாமல் செயல்படுவது தெரியவந்தது. அங்கு ஸ்பாவின் மேலாளராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும், அவருடன் மேலும் இரு பெண்களும் இருந்தனர். இதையடுத்து இரண்டு பெண்களையும் காவல்துறையினர் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். ஸ்பாவின் மேலாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததில் ஸ்பாவின் உரிமையாளர் திருச்சி வயலூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து உரிய அனுமதியின்றி ஸ்பா நடத்திய உரிமையாளர் செந்தில் குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ஸ்பாவின் உரிமையாளர் செந்தில்குமார், தளபதி விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக தலைமறைவாக இருந்த செந்தில்குமாரை காவல்துறையினர் இன்று (ஜூலை 29) அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களை பாராட்டி ஊக்குவித்து வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி விஜய் மக்கள் இயக்க மத்திய மாவட்ட பொறுப்பாளர் இதுபோன்ற சமூகவிரோத செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வெளியானது லியோ புதிய அப்டேட்..! சஞ்சய் தத் கிளிம்ப்ஸ்(glimpse) வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.