ETV Bharat / state

சென்னை கத்திப்பாரா போன்று திருச்சியிலும் சாலை அமைக்கப்படும் - மேயர் அன்பழகன் தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 12:34 PM IST

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்

Trichy Corporation Mayor Anbazagan: பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் இன்னும் ஒரு சில மாதங்களில் திறக்கப்படும் எனவும், இதன் மூலம் திருச்சி மாநகராட்சியில் போக்குவரத்து பிரச்சினை குறையும் எனவும் மாநகராட்சி மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் பேட்டி

திருச்சி: திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாநகராட்சி மேயர் அன்பழகன், “தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சியில் சென்னைக்கு நிகரான மாநகராட்சியாக திருச்சி ‌மாநகராட்சி உள்ளது.

பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம்: திருச்சி மாநகராட்சியுடன் 32 ஊராட்சிகள் இணைய உள்ளது. அவ்வாறு இணைந்தால், மிகப்பெரிய மாநகராட்சியாக உருவாகும். அதன்பின், தமிழக அரசு மூலமாக திருச்சி மாநகராட்சிக்கு பல்வேறு திட்டங்கள் கிடைக்கும். பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் இன்னும் ஒரு சில மாதங்களில் திறக்கப்படும். இதன் மூலம் திருச்சி மாநகராட்சியில் போக்குவரத்து பிரச்சினை குறையும். 2019ஆம் ஆண்டு பாதாளச் சாக்கடைத் திட்டம் அறிவிக்கப்பட்டு, 75 கிலோ மீட்டர்தான் முடிவடைந்திருந்தது.

தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்: திமுக பொறுப்பேற்ற பிறகு, இத்திட்டம் தற்போது 800 கிலோ மீட்டருக்கு மேல் முடிவடைந்து உள்ளது. இதில் 450 கிலோ மீட்டருக்கு சாலை போடப்பட்டு உள்ளது. இன்னும் 311 கிலோ மீட்டருக்கு அரசு ஒப்புதல் பெறுவதற்காக, நிதி ஒதுக்கீடு செய்ய அனுப்பப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் நிதி பெற்று, புதிய சாலை போடப்படும். மேலும் பஞ்சப்பூரில் 100 எம்.எல்.டி தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்க, 227 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து டெண்டர் செய்யப்பட உள்ளது.

கத்திபாரா போன்ற சாலை: தனியார் ஆம்னி பேருந்து வந்து செல்ல, 4 ஏக்கரில் ரூ.18.75 கோடியில் ஒரு பேருந்து நிலையம் அமைய உள்ளது. இதற்கும் நிதி ஒதுக்கி, ஒப்பந்தம் கோரப்பட உள்ளது. 350 கோடி ரூபாய் செலவில் பஞ்சப்பூரில் இருந்து குடமுருட்டி வரை, அல்லித்துறையில் இருந்து எம்.ஜி.ஆர் சிலை வரை 10 கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட உள்ளது. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதியுடன், சென்னை கத்திபாரா மேம்பால சாலை போன்று சாலை அமைவதற்கான திட்டம் இந்த ஆண்டில் துவங்கப்பட்ட உள்ளது.

ரூ.171 கோடி புதிய மார்க்கெட்: ஐடி பார்க் வருவதற்காக பேருந்து நிலையம் அருகில், திருச்சி மாநகராட்சிக்குச் சொந்தமான 14 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 30 ஏக்கரில் ஒலிம்பியாட்டுக்கு இணையான விளையாட்டு மைதானம், திருச்சியில் அமைய உள்ளது. 22 ஏக்கரில் ரூ.171 கோடியில் புதிய மார்க்கெட் அமைய உள்ளது.

தள்ளுவண்டி உணவகங்கள் அப்புறப்படுத்தப்படும்: திருச்சி மாநகராட்சி தூய்மையான மாநகராட்சியாக முதலமைச்சர் கையால் 50 லட்சம் பரிசு பெற்று, அந்த தொகை வங்கியில் டெபாசிட் செய்து, அதன் மூலம் வரும் வட்டியில் மாநகராட்சி ஊழியர்களது குழந்தைகளுக்கு மருத்துவம் மற்றும் கல்விச் செலவு செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம். திருச்சியில் போக்குவரத்திற்கு இடையூறாக அனுமதியின்றி செயல்பட்டு வரும் தள்ளுவண்டி உணவகங்கள் அப்புறப்படுத்தப்படும். வருகிற அக்டோபரில், மாநகராட்சி உடன் ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்படும்” என்றார்.

இதையும் படிங்க: மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.