ETV Bharat / state

"ராமர் மயமாகி வரும் இந்தியா" - ஆளுநர் ஆர்.என்.ரவி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 12:14 PM IST

Etv Bharat
Etv Bharat

TN Governor RN Ravi: காலனியாதிக்க காலத்தில் கோயில்கள் மழுங்கடிக்கப்பட்டதாகவும் தற்போது, மீண்டும் நாடு ராமர்மயம் ஆகி வருவதாகவும், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாட்டு மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் திருச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி

திருச்சி: 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் 'பூலோக வைகுண்டம்' என பக்தர்களால் அழைக்கப்படுவது, ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இன்று (ஜன.17) ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அர்ச்சகர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஆளுநர் ரங்கநாதர் சந்நிதி, தாயார் சன்னதிகளில், சக்கரத்தாழ்வார் சன்னதி, ராமானுஜர் சன்னதி ஆகிய முக்கிய சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்.

அதன் பின்னர் தாயர் சன்னிதி அருகே உள்ள ஸ்ரீ மேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன் நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக ஆளுநர் ஆர் என்‌ ரவி, "நம்முடைய வாழ்க்கையில் கோயில்கள் மையமாக அமைந்துள்ளன.

ஒரு கிராமம் உருவாவதற்கு முன்பாக அங்கு கோயில்கள் அமைக்கப்படும். அதனை மையப்படுத்தியே அந்த கிராமங்களின் வளர்ச்சி இருக்கும். அந்த வகையில், ஒரு ஈர்ப்பு விசையாக கோயில்கள் உள்ளன. காலனியாதிக்க காலத்தில் அது மழுங்கடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் 'நாடு ராமர் மயமாகி' வருகிறது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் ராம பிரான் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார். கோயில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோயில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். கோயில் மட்டுமல்ல பொது இடங்களிலும், தனியார் இடங்களில் தூய்மை பேண வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சமூகநீதியா? சனாதனமா? - ‘திருவள்ளுவர் தினம்’ வாழ்த்தில் கருத்து மோதல்.. டெல்லி என்ன சொல்கிறது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.