ETV Bharat / state

அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் - கல்குவாரி உரிமையாளர் சங்கம்

author img

By

Published : Jul 1, 2023, 11:25 AM IST

தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும்
தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும்

தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு அரசுக்கு 15 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும்

திருச்சி: தமிழ்நாட்டில் பெரிய கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட திட்டங்களை, சிறிய மினரல் என்றழைக்கப்படும் கல், ஜல்லி உடைக்கும் சிறு வளத்துறை அமல்படுத்தி உள்ள நிலையில், மேலும் பல பிரச்சனைகள் இருந்து வந்ததால், தமிழ்நாடு முழுவதும் ஜூன் 26ஆம் தேதி முதல் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2,500 கல்குவாரிகளும், 3 ஆயிரம் கிரஷர்கள் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே வேலை நிறுத்தப் போராட்டத்தால் கட்டுமானப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சின்னசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “மேஜர் மினரலுக்கு உண்டான சட்ட திட்டங்களை மைனர் மினரல் என்றழைக்கப்படும் கல், ஜல்லி உடைக்கும் சிறு தொழில்களுக்கு அமல்படுத்திய காரணத்தால் குவாரிகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. அதன் காரணமாக தொழிலை தொடர முடியாத நிலை உருவாகியுள்ளது. சிலர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் என்ற போர்வையில் எங்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

கனிமவள கடத்தல், கனிம வளக் கொள்ளை என ஊடகங்களில் செய்திகள் வருவதால் எங்கள் தொழில் பாதிப்படைகிறது. கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இது போன்ற பிரச்னைகள் வந்ததில்லை. தற்போது புதிதாக பல்வேறு விதமான சட்ட திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.

குவாரிகளுக்கு கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படுகிறது. இதனால் சிறிய கல்குவாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜூன் 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.

மேலும் பேசியபோது, “தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த வேலை நிறுத்தம், யாருடைய தூண்டுதல் பெயரிலும் நடைபெறவில்லை. எங்களது கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு பலமுறை நிறைவேற்றி உள்ளது. அதற்காக நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்த வகையில், தற்போதும் தமிழ்நாடு அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்று எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது. சட்ட விரோதமாக கல்குவாரி செயல்பட்டால் அவர்களுக்கு எங்கள் ஆதரவு கிடையாது. மாதம் மாதம் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி கொடுக்கிறார்கள். தமிழ்நாடு அரசு 2016ஆம் ஆண்டுக்குப் பின் கொண்டு வந்த விதிமுறைகளை தவிர்க்க வேண்டும்.

கனிம வளங்களை சற்று கூடுதலாக எடுப்பதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். தற்போது சில பாறைகளுக்கு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த குவாரிகள் 20, 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. தற்போது திடீரென அபராதம் விதிப்பது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது” என கூறினார்

மேலும், தமிழ்நாடு அரசுக்கு 15 கோரிக்கைகளை வைத்துள்ளோம். அதற்கு சுமூகமான, நியாயமான தீர்வு காண வேண்டும். அதிகாரிகள் எங்களை அச்சுறுத்தாமல் நண்பர்களாக இருக்க வேண்டும். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் என்று நம்பிக்கை உள்ளது. பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு எங்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றார்.

இதையும் படிங்க:கரூர் கல்குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம்.. ‘இது கண்துடைப்புதான்’ - கல்குவாரிகள் எதிர்ப்பு இயக்கம் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.