ETV Bharat / state

கரூர் கல்குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம்.. ‘இது கண்துடைப்புதான்’ - கல்குவாரிகள் எதிர்ப்பு இயக்கம் குற்றச்சாட்டு

author img

By

Published : Jul 1, 2023, 9:40 AM IST

Karur Quarries were fined anti quarry movement has accused its just a formality action and demand to Minister of Mineral Resources should resign
கரூரில் குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது கண்துடைப்பு நடவடிக்கை

கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 12 குவாரிகளுக்கு 44 கோடி ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்பட்டது கண் துடைப்பு நடவடிக்கை என சட்டவிரவாத கல்குவாரிகள் இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது.

கரூரில் குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது கண்துடைப்பு நடவடிக்கை

கரூர்: செங்குந்தபுரம் காமராஜர் வடக்கு பகுதியைச் சேர்ந்த எம்ஆர்கே.சிவா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு உத்தரவின் அடிப்படையில், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு புலத் தணிக்கை மேற்கொண்டு, தமிழ்நாடு சிறு கனிம விதிகள் 1959இன் கீழ் விதிமுறை மீறல்கள் இருப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 12 குவாரிகளில் மட்டும் 44 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரத்து 357 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

இது குறித்து, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சட்ட விரோத கல் குவாரிகள் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சண்முகம் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், “கரூர் மாவட்டத்தில் சட்ட விரோத கல்குவாரிகள் அதிகமாக செயல்பட்டு வருகிறது. அரசுக்கு இது குறித்து பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவினால்தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர் மாதம் ஒன்றுக்கு ஐந்து கல்குவாரியும், மாவட்ட வருவாய் அலுவலர் 10 குவாரிகளும் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இதுவரை எத்தனை குவாரிகளில் ஆய்வு நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கல்குவாரிகள், அரசை மிரட்டும் வகையில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், அரசு நடுநிலையோடு செயல்பட்டு சட்டவிரோதமாக செயல்படும் அனைத்து கல்குவாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும், அரசு சட்ட விரோதமாக இயங்கிய கல்குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை. முறையாக டிஜிட்டல் சர்வே மூலம் கல்குவாரிகளை ஆய்வு செய்தால், பல லட்சம் கோடி அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை அபராதமாக வசூல் செய்ய முடியும். ஆனால், பல கோடி இழப்பீடு ஏற்படுத்திய கல்குவாரிகளுக்கு சில லட்சங்களில் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் தலையிட்டதால் 12 கல்குவாரிகளுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது என கணக்கீடு காட்டுவதற்காக கரூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை உள்ளது. குவாரி ஒன்றுக்கு 40 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். ஆனால், 12 கல்குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபாரதம் வசூலிக்கப்பட்டுள்ளது ஒரு கண் துடைப்பு நடவடிக்கை.

கரூர் மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்று 76 சாதாரண கல்குவாரிகளும், அரசு புறம்போக்கு நிலத்தில் மூன்று கல் குவாரிகளுக்கும் குத்தகை உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டவிரோதமாக சுமார் 200க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகிறது. தமிழ்நாடு அளவில் 9 ஆயிரம் கல்குவாரிகள் சட்ட விரோதமாக இயங்கி வருகிறது. இதை கல்குவாரிகள் சங்கத் தலைவரே தெரிவித்து உள்ளார்.

கல்குவாரிகள் சட்ட விரோதமாக இயங்கி வருவதால் இயற்கை விவசாயம் அழிந்து வருகிறது. மக்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற்படுகிறது. தட்பவெப்ப சூழ்நிலை, பல்லுயிர் சூழல் மாற்றம் என அனைத்து தரப்பினரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். புகலூர் வட்டத்திற்கு உட்பட்ட குப்பம் கிராமத்தில் மட்டும் 60க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக. விஎஸ்டி ப்ளூ மெட்டல், பெஸ்ட் ப்ளூ மெட்டல், விஆர்ஜி ப்ளூ மெட்டல் அரசு நிர்ணயித்த அளவுக்கு மேல் கற்களை வெட்டி ராட்சத இயந்திரங்களைக் கொண்டு கல்குவாரியை இயக்கி வருகின்றனர். குப்பம் கிராமத்தில் 7 ஆண்டுகளாக சட்ட விரோதமாக இயங்கும் செல்வகுமார் ப்ளூ மெட்டல் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்த விவசாயி ஜெகநாதன் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். ஆனால், இந்த கல்குவாரி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை.

சமீபத்தில் கல்குவாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, அமைச்சர் துரைமுருகன் 100 கோடி ரூபாய் லஞ்சம் கேட்பதாக பகீரங்கமாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் எம்எல்ஏ ஒருவருக்கு முறைகேடாக கல்குவாரி உரிமம் வழங்கப்பட்டது எனக் கூறி அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.

ஆனால், இன்று துரைமுருகன் மீது தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது? கனிம வளங்களை பாதுகாப்பது குறித்து முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அறிக்கைகள் மட்டுமே வருகின்றன. நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வதில்லை. இதனை முதலமைச்சர் கண்காணிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: TMB IT Raid: 4 ஆயிரத்து 410 கோடி முறைகேடு - வருமான வரித்துறை தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.