லாரி - ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதல் - குழந்தை உள்பட 6 பேர் பலி!
Published: Mar 19, 2023, 9:24 AM


லாரி - ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதல் - குழந்தை உள்பட 6 பேர் பலி!
Published: Mar 19, 2023, 9:24 AM
திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், ஆம்னி வேனும் மோதிக் கொண்ட விபத்தில் குழந்தை, பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி: லாரியும், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து திருச்சி வழியாக கும்பகோணம் கோவிலுக்கு செல்வதற்காக ஓம்னி வேனில் குழந்தை உள்பட 9 பேர் பயணம் செய்து உள்ளனர். இதே போல் எதிர் திசையில் மரக் கட்டைகளை ஏற்றுக் கொண்டு திருச்சியில் இருந்து கரூர் நோக்கி லாரி சென்று உள்ளது.
திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்த திருவாசி அருகே அதிகாலை 3.50 மணிக்கு எடப்பாடியில் இருந்து வந்த ஆம்னி வேனும், மரக் கட்டை லோடு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆம்னி வேனில் பயணம் செய்த ஒரு குழந்தை, ஒரு பெண், 4 ஆண்கள் என ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாத்தலை போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டு இருந்த 3 பேரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் கூறினர். மேலும் விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொள்ள திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தொடரும் விமான விபத்து: பயிற்சி விமான விபத்தில் பெண் விமானி உள்பட 2 பேர் பலி!
மேலும் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், விபத்து குறித்து போலீசாரிடம் தகவல் கேட்டறிந்தார். இந்த விபத்தினால் திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையோரம் இழுத்து வந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டனர். இந்த திருவாசி சாலை திருச்சியிலிருந்து முசிறி வரை 50 கிலோ மீட்டர் தூரம் வரை மிகவும் குறுகலான சாலையாக உள்ளது. இந்த பகுதியில் சமீபகாலமாக அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் நிகழ்கிறது.
ஆகவே இந்த பகுதியில் ஆபத்தான வளைவுகளில் வேகத்தடை மற்றும் இரும்பு பேரிகார்டுகள் அமைக்கவும் சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்யவும் அப்பகுதி பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் - மகளிர் உரிமைத் தொகை குறித்த முக்கிய அறிவிப்பு?
