ETV Bharat / state

நிதிநிலைமைக்கு ஏற்ப பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.. அன்பில் மகேஷ் உறுதி!

author img

By

Published : Feb 3, 2023, 12:28 PM IST

நிதிநிலைமைக்கு ஏற்ப பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.. அன்பில் மகேஷ் உறுதி!
நிதிநிலைமைக்கு ஏற்ப பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.. அன்பில் மகேஷ் உறுதி!

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் அரசின் நிதிநிலைமைக்கு ஏற்ப முடிவெடுத்து படிப்படியாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பு

திருச்சி: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை ஒட்டி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நினைவு நாள் மௌன அஞ்சலி ஊர்வலம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வி.என்.நகரில் தொடங்கி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலை வரை நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு அண்ணா சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “தமிழ்நாடு முழுவதும் அண்ணாவின் புகழை பறைசாற்றும் விதத்தில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இந்த பேரணி நடைபெற்றது.

பகுதி நேர பேராசிரியர்கள் போராட்டத்தை தொடங்கிய அன்று காலையிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 30 மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர பேராசிரியர்கள், தங்களது கருத்துக்கள் அடங்கிய மனுவை என்னிடம் அளித்தனர். அதனை வாங்கிக் கொண்டுதான் தமிழ்நாடு முதலமைச்சர் வேலூர் பயணம் மேற்கொண்டபோது, ரயிலில் இதுகுறித்து பேசினேன்.

குறிப்பாக அவர்களது கோரிக்கைகளில் எவற்றை நிறைவேற்ற முடியும், தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் எவையெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். இது தொடர்பாக நல்ல ஒரு முடிவை முதலமைச்சரின் தலைமை அலுவலகம் எடுக்கும்.

நிதி நிலைமைக்கு ஏற்ப அவர்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும், அதனை படிப்படியாக நிறைவேற்றுகின்ற வண்ணம் எங்களது செயல்பாடுகளில் இருக்கும். ஆசிரிய பெருமக்கள் எதற்காகவும் வருத்தப்பட வேண்டாம். இது உங்களுக்கான ஆட்சி. ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.

மாநகராட்சியின் 33 வார்டுகளில், ஒரு வார்டு மட்டுமே அதிமுக கவுன்சிலரை கொண்டுள்ளது. அந்த வார்டு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கும் அந்த சேலஞ்ச் தேவை. நீயா, நானா என பார்க்கும் அளவிற்கு நாங்களும் களத்தில் இறங்கியுள்ளோம். ஈவிகேஎஸ் இளங்கோவன் செல்லும் இடமெல்லாம் மக்களுடைய வரவேற்பும் சிறப்பாக உள்ளது. குறைந்தபட்சம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்றார்.

இதையும் படிங்க: தமிழக பாஜகவின் புதிய திட்டம்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் தனித்தனியாக ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.