ETV Bharat / state

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உருவப்படத்திற்கு இறுதிச்சடங்கு செய்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 6:27 PM IST

திருச்சியில் முதலமைச்சர் சித்தராமையாவை கண்டித்து  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சியில் முதலமைச்சர் சித்தராமையாவை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Farmers Protest in Trichy: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்க வலியுறுத்தி திருச்சியில் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்கு நடத்தி விவசாயிகள் கண்டனங்களை தெரிவித்தனர்.

திருச்சியில் முதலமைச்சர் சித்தராமையாவை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 55வது நாளான இன்று கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்கு நடத்தி இன்று (செப்.26) நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அய்யாக்கண்ணு பேசியதாவது, "2016ஆம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சியின்போது, பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர் நீதிமன்றம் கூறிய பிறகும், பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய காலக் கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலேயே போலியாக கையெழுத்தைப் போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது. ஆகையால், விவசாயக் கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம்.

மேட்டூரில் இருந்து கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டுகிறோம். அதேபோல், ஆலடியாறு டேமில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால் தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன் பெற முடியும். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் காவிரியில் மேகதாது அணை கட்டக்கூடாது என்றும், காவிரியில் மாதந்தோறும் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். விவசாயிகளின் உரிமைக்காக ஜனநாயக நாட்டில், டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும்" என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக பேசிய அய்யாக்கண்ணு, "காவேரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தடுக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட முடியாது என கர்நாடகா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருச்சியில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்கு நடத்தும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டதுடன், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: எம்ஆர்பி செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்.. கர்ப்பிணி உள்பட 10 பேர் மயக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.