ETV Bharat / state

ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் ராமரின் குலதெய்வமா? - கோயில் பட்டர் கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 12:00 PM IST

Updated : Jan 18, 2024, 12:13 PM IST

யோத்திக்கும் ஶ்ரீரங்கத்திற்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
யோத்திக்கும் ஶ்ரீரங்கத்திற்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Connection Between Ayodhya Ram And Sri Ranganathar: அயோத்தி ராமருக்கும், திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதருக்கும் உள்ள தொடர்பை பற்றி பட்டர் ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி வாயிலாக கூறியுள்ளார்.

ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் ராமரின் குலதெய்வமா - கோயில் பட்டர் கூறுவதென்ன?

திருச்சி: இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, வருகிற ஜன.22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் அரசியல் பிரபலங்கள், சினிமாப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், குருக்கள் என சுமார் 7 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயில் விழாவுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டு, தினசரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் பிரமாண்ட கோயில் எப்படி இருக்கும் என்பதை அறிய நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். கும்பாபிஷே விழா நடைபெற உள்ள நிலையில். பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு உள்ளார். மேலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், 108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு, வருகிற 20ஆம் தேதி மோடி வருகை புரிந்து, சாமி தரிசனம் செய்து விட்டு அயோத்தி ராமர் கோயில் விழாவிற்கு திட்டமிட்டு உள்ளார்.

ஶ்ரீரங்கம் ரங்கநாதர்: அயோத்தி ராமரின் மூல அர்ச்சாவதாரம் என்று போற்றப்படுவது, ஸ்ரீரங்கநாதர் திருவடிவம். திருமால் மண்ணுலகுக்கு வரும் முன்னரே, தமது சயன வடிவத்தை முதன்முதலாக ஸ்ரீராமரின் முன்னோருக்கு அளித்து அருள்பாலித்தார் என்கிறது, புராணம். அதையே ஸ்ரீராமர் குலதெய்வமாக போற்றி வழிபட்டார் என்கிறது ராமாயணம். இது ஒரு புறம் இருக்க, அயோத்தி ராமருக்கு ஶ்ரீரங்கம் ரங்கநாதர் குலதெய்வம் என அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து ஶ்ரீரங்கம் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “அவதாரம் பல எடுத்தாலும், ராம அவதாரம் வாழ்க்கையின் நெறிமுறைகளை கற்றுக் கொடுத்தது. ராமாயணத்தை நிறைய பேர் எழுதி உள்ளனர். ஆனால் நிகர் இல்லாத தமிழில் கம்பர்தான் எழுதியுள்ளார். அந்த தமிழுக்கு நிகரான தமிழ் எங்கும் கிடைக்கவில்லை. கம்ப ராமாயணத்தில் ஒவ்வொரு அவதாரம் பற்றியும் சிறப்பாக கூறப்பட்டு உள்ளது.

அயோத்தி மன்னருக்கு அளித்த கோயில்: அந்த கம்பராமாயணம் எழுதி, ஶ்ரீரங்கத்தில்தான் முதன் முதலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. ராமாயணம் அரங்கேற்றத்திற்கு என்ன காரணம் என்றால், ராமனுக்கு நெருக்கமான சம்பந்தம் சூரிய வம்சத்து ராஜாக்கள் அனைவரும் ஆராதனம் செய்யப்பட்ட பெருமாள் தொழுத பெருமாள். ‘ஆரா அருள் அமுதம் பொதிந்த கோயில் அம்புயத்தோன் அயோத்தி மன்னருக்கு அளித்த கோயில்’. அயோத்தியை ஆண்ட அரசர்கள் அத்தனை பேருக்கும், குலதெய்வமாக இருந்தது ஶ்ரீரங்கம் ரங்கநாதர் சாமி.

தோளாத தனி வீரன் தொழுத கோயில் என அழைக்கப்படுகிறது. தோளாத தனி வீரன் என்றால், அது ராமனை குறிக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பான ராமாயணத்தை கம்பர் ஶ்ரீரங்கத்தில் அரங்கேற்றினார். ராமன் அவதாரம் செய்த இடம், அயோத்தி. ராமன் ஆண்ட காலத்தில் அரசனாக அயோத்தியில் இருந்தார். தன்னுடைய அவதாரம் முடிந்து சென்ற பிறகு, தன்னுடைய குல தெய்வத்தை விபீஷணனுக்கு கொடுத்தார்.

ஆழ்வார் குல தெய்வத்தை எடுத்துக் கொண்டு, விபீஷணன் அயோத்தியில் இருந்து இலங்கை செல்லும் வழியில், இரண்டு காவேரி ஆற்று நடுவில் இருப்பேன் என ரங்கநாதர் பிரமாணம் எடுத்தார். அந்த இடம்தான் ஶ்ரீரங்கம். அதனால்தான் அனைத்து தரப்பு மக்களும் ஶ்ரீரங்கத்தைக் கொண்டாடுகின்றனர்” என தெரிவித்தார்.

விபீஷண ஆழ்வாருக்கு கொடுத்ததுதான் ஶ்ரீரங்கநாதர்: கோயில் தீர்த்த மரியாதைகாரர் சுந்தர் ராஜா சாரி பேசுகையில், “ராவண யுத்தம் முடிந்த பிறகு, ராவணனின் தம்பி விபீஷணனுக்கு ஆழ்வாருக்கு என்ற பரிசு கொடுக்க வேண்டும் என‌ யோசித்த ராமர், சூரிய வம்சம் இஷ்க்குவ குல தனம் வம்சத்தின் முன்னோர்கள் பூஜை செய்த தங்க விமானத்தை பரிசாக அளிக்கிறார். அதை எடுத்துக் கொண்டு விபீஷணன், இலங்கை செல்லும் போது, ஶ்ரீரங்கம் காவேரி ஆற்றில் குளிப்பதற்கு வைக்கிறார். சிரம் பரிகாரம் செய்து கொண்டு இருந்தபோது ரங்கநாதர் இங்கேயே இருந்து விட்டார்.

அதன்பின், ஆழ்வார்கள் வந்து குட திசை முடியை வைத்து, குண திசை பாதம் நீட்டி, வட திசை பின்பு காட்டி, தென் திசை இலங்கையை நோக்கி என சொல்கிறார்கள். மேற்கு பக்கம் ரங்கநாதர் தனது முடியை வைத்து, கிழக்கு பக்கம் பாதம் வைத்து, தென் திசை இலங்கையை நோக்கி விபீஷணனுக்கு அருள் ஆசி வழங்குகிறார். ராமர் மற்றும் ராமரின் முன்னோர்கள் வழிபட்ட பெருமாளை விபீஷண ஆழ்வாருக்கு கொடுத்ததுதான் ஶ்ரீரங்கநாதர்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜன.20 அன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. வீடு வீடாக போலீசார் ஆய்வு!

Last Updated :Jan 18, 2024, 12:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.