ETV Bharat / state

ஆடி அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருச்சியில் குவிந்த மக்கள்

author img

By

Published : Jul 17, 2023, 10:59 AM IST

aadi amavasai lot of devotees pithru tharpanam in trichy Srirangam amma mandapam kaveri river
ஆடி அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருச்சியில் குவிந்த மக்கள்

ஆடி அமாவாசையொட்டி, திருச்சியில் ஶ்ரீரங்கம் காவிரி அம்மா மண்டபம் படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர்

ஆடி அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருச்சியில் குவிந்த மக்கள்

திருச்சி: ஆடி அமாவாசை நாளில், இறந்த தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதால், தாங்களும், தங்களின் வம்சத்தினரும் மேம்பாடு அடைவர் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. ஆகையால், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அமாவாசை தினத்தன்று, மக்கள் தங்களின் இறந்த முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதை, வழக்கமாக கொண்டு உள்ளனர்.

அந்தவகையில் குறிப்பாக, பூலோக சொர்க்கம் என்றழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அருகேயுள்ள, அம்மா மண்டபம் காவேரி ஆற்று படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க, ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில், ஆயிரக்கணக்கில் மக்கள் வருவது வழக்கம்.

அதன் படி இன்று ஆடி அமாவாசை தினம் என்பதால், அம்மா மண்டபம் படித்துறையில் தர்ப்பணம் செய்ய, பல்லாயிரக்கணக்கானோர் கூடினர். மக்கள் அனைவரும் காவிரி ஆற்றில் நீராடி அவர்தம் முன்னோர்க்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். அமாவாசை தினங்கள் முன்னோர் வழிபாட்டிற்கானது.

இதுகுறித்து புரோகிதர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது, “ஒருவரால் வருடத்தின் அனைத்து அமாவாசைகளிலும் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும் ஆடி, புரட்டாசி, தை, மாசி மாதங்களில் வருகின்ற அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். நாம் தர்ப்பணம் கொடுப்போமா என முன்னோர்கள் காத்து கொண்டிருப்பார்கள், ஆகையால் ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

இந்த முறை ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதால் எந்த அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்கிற குழப்பம் மக்கள் மத்தியில் எழுந்தது. வருடத்தின் அனைத்து அமாவாசைகளிலும் பலர் தர்ப்பணம் கொடுப்பர். ஆனால் சிலர் வருடத்தில் ஒரு முறை மட்டும் தான் தர்ப்பணம் கொடுப்பர். அவர்கள் ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி வரும் ஆடி மாதம் இரண்டாவது அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம். இரண்டு அமாவாசைகளில் பண்ணினாலும் தவறு இல்லை.

இதுவரை தர்ப்பணங்கள் பண்ணாதவர்கள் ஆடி 31-ஆம் தேதி பண்ணிக்கொள்ளலாம். நாம் செய்யக்கூடிய தர்ப்பணத்திற்கு பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைத்துக் கொண்டே இருக்கும்” எனத் தெரிவித்தார்.

காவிரி நதி புனித நதி என்பதால் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்விற்கு திருச்சி மாநகர் பகுதி மட்டுமில்லாமல் புற நகர் பகுதியில் இருந்தும் அருகிலுள்ள மாவட்டமான புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க மாவட்ட, மாநகர நிர்வாகங்கள் சார்பில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆயினும் மக்கள் பெருந்திரளாக கூடியதால், மாம்பழச் சாலையிலிருந்து, அம்மா மண்டபம் வழியாக, ஸ்ரீரங்கம் செல்லும் பாதை, மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

இதையும் படிங்க: யோகா கலைக்கு உலகளவில் அங்கீகாரம் வாங்கித் தந்தவர் மோடி - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.