ETV Bharat / state

நீட் தேர்வு எழுதிய மாணவிக்கு உதவிய காவலர் - பாராட்டு தெரிவித்த எம்எல்ஏ

author img

By

Published : Sep 15, 2020, 2:11 AM IST

Thiruvallur Neet exam
Thiruvallur Neet exam

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே நீட் நுழைவுத் தேர்வு எழுத அசல் அடையாள அட்டையை மறந்து வந்த மாணவிக்கு உதவிய இரண்டாம் நிலை காவலருக்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நீட் நுழைவுத் தேர்வு எழுத மாணவர்கள் கடும் சோதனைகளுக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். அலுவலர்களின் முதல்கட்ட சோதனையின்போது நீட் நுழைவுத் தேர்வு எழுத வந்த சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த மோனிகா என்ற மாணவி அசல் அடையாள அட்டையை மறந்து வீட்டில் வைத்துவிட்டு வந்துள்ளார்.

இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கும்மிடிப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் மாணவியையும் அவரது தாயையும் அழைத்து விசாரணை நடத்தினார். அசல் அடையாள அட்டை கொண்டு வரவில்லை எனவும் அதனை இன்டெர்நெட் மையத்தில் பதிவிறக்கம் செய்வதற்கான செல்போனும் தன்னிடம் இல்லை என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி அறிவுறுத்தலின் பேரில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மாணவியின் வீட்டிற்கு அசல் அடையாள அட்டை கொண்டு வருவதற்காக பெண்ணின் தாய் ஷீலாவை இருசக்கர வாகனத்தில் மகேஷ்வரன் என்ற காவலர் அழைத்து சென்றார்.

சுமார் 1.30 மணி நேரத்தில் மின்னல் வேகத்தில் புரசைவாக்கத்திற்கு சென்று மாணவியின் அசல் அடையாள அட்டையை கொண்டு வந்து குறித்த நேரத்தில் காவலர் மாணவியிடம் வழங்கினார்.

இதுகுறித்து தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் வந்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். விஜயகுமார் காவலர் மகேஸ்வரனை கும்மிடிபூண்டி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து கை கடிகாரம் கேடயம் பரிசளித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.