ETV Bharat / state

"அரசு அக்கறை செலுத்த மறுத்தால் நானே நேரடியாக களத்திற்கு வருவேன்" - ராமதாஸ்!

author img

By

Published : Sep 21, 2020, 6:50 PM IST

"அரசு அக்கறை செலுத்த மறுத்தால் நானே நேரடியாக களத்திற்கு வருவேன்" - மரு.ராமதாஸ்
"அரசு அக்கறை செலுத்த மறுத்தால் நானே நேரடியாக களத்திற்கு வருவேன்" - மரு.ராமதாஸ்

குரோமேட்ஸ் ஆலையில் வைக்கப்பட்டிருக்கும் 2.50 லட்சம் குரோமியக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றவில்லை என்றால் நானே நேரடியாகப் போராட்டத்தை முன்னெடுப்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை : குரோமேட்ஸ் ஆலையில் வைக்கப்பட்டிருக்கும் 2.50 லட்சம் குரோமியக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றவில்லை என்றால் நானே நேரடியாகப் போராட்டத்தை முன்னெடுப்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இராணிப்பேட்டை பகுதியில் நிலத்திலும், நிலத்தடி நீரிலும் குரோமியம், ஈயம் உள்ளிட்ட உலோகங்கள் கலந்திருப்பதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அறிவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவந்துள்ளன.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் குரோமியம், ஈயம் உள்ளிட்ட கழிவுகள் முதலில் மண்ணிலும், பின்னர் நிலத்தடி நீரிலும் கலப்பதால் அதை பயன்படுத்தும் மக்களுக்கு மிகவும் ஆபத்தான நோய்கள் ஏற்படக்கூடும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குரோமியக் கழிவுகளின் வெளியேற்றம் உடனடியாக கட்டுப்படுத்தப்படாமல், இதே நிலை தொடர அனுமதிக்கப்பட்டால் இராணிப்பேட்டை பகுதியில் சுகாதாரப் பேரழிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். தமிழ்நாடு குரோமேட்ஸ் ஆலையில் அகற்றப்படாமல் வைத்திருக்கும் குரோமியக் கழிவுகள் நிலத்தில் பரவியதால் மட்டும், அப்பகுதியில் 600 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் மலட்டுத் தன்மை கொண்டவையாக மாறி விட்டன.

குரோமியக் கழிவுகளின் வெளியேற்றம் உடனடியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், மனிதர்களுக்கும், இயற்கைக்கும் சரி செய்ய முடியாத பாதிப்புகள் ஏற்படும். சுற்றுச்சூழல் சீரழிவிலிருந்து மக்களைக் காப்பது தான் ஆட்சியாளர்களின் முதல் பணியாக இருக்க வேண்டும். அதன்படி, இராணிப்பேட்டை பகுதி மக்களை குரோமியக் கழிவுகளால் ஏற்படும் கொடிய நோய் பாதிப்புகளில் இருந்தும், விளைநிலங்களை மலட்டுத் தன்மையிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.

அதற்கான முதல் நடவடிக்கையாக தமிழ்நாடு குரோமேட்ஸ் ஆலையில் வைக்கப்பட்டிருக்கும் 2.50 லட்சம் குரோமியக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்; எந்தெந்த ஆலைகளில் இருந்து குரோமியக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றனவோ, அந்த ஆலைகளுக்கு எச்சரிக்கை விடுப்பதுடன், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதற்குப் பிறகும் ஏதேனும் ஆலைகளில் இருந்து குரோமிய கழிவுகள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டால் அவற்றை நிரந்தரமாக மூட ஆணையிட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், கரோனா ஊரடங்கு விலக்கப்பட்ட பின்னர் இராணிப்பேட்டையில் நானே தலைமையேற்று மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை நடத்துவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.