ETV Bharat / state

திருப்பூரில் பயன்பாட்டுக்கு வராத பாதாள சாக்கடைக்கு வரியா? அதிமுக கவுன்சிலர்கள் 17 பேர் மனு!

author img

By

Published : Jul 3, 2023, 11:01 PM IST

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிமுக கவுன்சிலர்கள் 17 பேர் திருப்பூர் மேயரிடம் மனு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிமுக கவுன்சிலர்கள் 17 பேர் திருப்பூர் மேயரிடம் மனு

திருப்பூரில் பயன்பாட்டுக்கு வராத பாதாள சாக்கடைக்கு வரிவிதிக்கப்பட்டிருப்பதை ரத்து செய்யக்கோரியும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் திருப்பூர் மாநகராட்சியின் அதிமுக எதிர்க்கட்சி குழு தலைவர் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் 17 பேர் மாநகராட்சி மேயரிடம் மனு அளித்துள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிமுக கவுன்சிலர்கள் 17 பேர் திருப்பூர் மேயரிடம் மனு

திருப்பூர் மாநகராட்சியின் அதிமுக எதிர்க்கட்சி குழு தலைவரும், 42 ஆவது வார்டு கவுன்சிலருமான ஆர்.அன்பகம் திருப்பதி தலைமையில், அதிமுக கவுன்சிலர்கள் 17 பேர் இணைந்து திருப்பூர் மாநகராட்சி மேயரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஏற்கனவே பணிபுரிந்து வருகிற அந்தந்த பகுதிகளிலேயே பணியில் அமர்த்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

பயன்பாட்டுக்கு வராத பாதாளச் சாக்கடைக்கு வரி விதித்திருப்பதை ரத்து செய்து, பாதாளச் சாக்கடை பயன்பாட்டுக்கு வந்த பின்பு வரி விதிப்பு குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். அதிக மாமன்ற உறுப்பினர்கள் கொண்ட அஇஅதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரம் மாமன்றத்தில் வழங்கப்படுவதில்லை.

மேலும், பலமுறை நேரில் கேட்டும் கடிதம் மூலமாக தங்களிடம் தெரிவித்தும் மாநகராட்சியில் அஇஅதிமுக மாமன்ற குழுவிற்கு அறை மற்றும் இருக்கை ஒதுக்கப்படவில்லை. ஆகவே தாங்கள் பரசீலித்து முறையாக ஒதுக்கீடு செய்யக் கேட்டுக் கொள்கிறோம். வடக்கு பகுதியில் சாந்தி தியேட்டர், சாமுண்டிபுரம், காந்தி நகர், பெரியார் காலனி, அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள அனைத்து கழிவு நீர் மற்றும் மழைக் காலங்களில் ஏற்படுகின்ற வெள்ளப் பெருக்கு அனைத்தும் ஒரே இடத்தில் வந்து சேரும் விதமாக உள்ளது.

இப்பகுதியில் புதியதாக மழை நீர் வடிகால் அமைக்க திட்டம் தயாராகி வருவதாக தெரியவருகிறது. சம்பந்தப்பட்ட வார்டுகளின் மாமன்ற உறுப்பினர்களைக் கலந்து, எந்த வார்டுக்கும் பாதிப்பு இல்லாமல் தனித்தனியாக பல பிரிவுகளாகப் பிரித்து கழிவு ஈரை வெளியேற்றி நல்லாற்றுக்கு செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்ற வகையில் திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தப்புள்ளி விபரத்தில் முழுமையான விதிமுறைகளை அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் அடங்கிய சிறப்புக் கூட்டம் காலதாமதமின்றி நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த மாமன்றக் கூட்டத்தில் மேயரிடமும், ஆணையாளரிடமும் பில்லூர் அணைக்கு வரக்கூடிய தண்ணீரை தடுக்கின்ற விதமாக கேரள அரசு அணை கட்ட முயற்சி செய்து வருவதை கண்காணித்து, ஆய்வு செய்து தடுப்பதற்கு மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு அமைக்கச் சொல்லி அஇதிமுக மாமன்ற உறுப்பினர்கள் சார்பாக கடந்த மே30ஆம் தேதியன்று கடிதம் கொடுத்திருந்தோம் அதற்கு உரிய நடவடிக்கை துரிதமாக செய்ய வேண்டும்.

மேலும், மாமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். திருப்பூர் மாநகராட்சி, வார்டு எண் 45க்கு உட்பட்ட நொய்யல் வீதி டிஎஸ் எண் 442/3, 443/4, 445/5 காலையில் 16ஆயிரம் சதுர மீட்டர் அரசு புறம்போக்கு நிலமாக இருந்தது. இந்நிலத்தை அப்பகுதியைச் சார்ந்த முகமது சாலியா என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வந்தார்.

ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்லி அரசு அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்தார்கள். அதனால் மேற்கண்ட முகமது சாலியா திருப்பூர் சார்பு நீதிமன்றத்தில் OS 286/2005 ஆக தொடர்ந்து அவருக்கு பட்டா வழங்க வேண்டுமென வழக்கு போட்டிருந்தார். அந்த மனுவை மேற்படி நீதிமன்றம் 2008 ஜூன் 17 ஆம் தேதி தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து மேற்படி முகமது சாலியா திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஏ.எஸ். 5/2014 ஆக வழக்கு தொடர்ந்தார்.

பின்னர் முகமது சாலிய இறந்ததால் அவருடைய வாரிசுகளாகிய ஹவாமா பீவி, எம். ஜமால் அப்துல் நாசர், ஏ.ஹபினா நிஷா, எம்.ஹரிபன நிஷா ஆகியோர் வழக்கை தொடர்ந்து நடத்தினார்கள். இவ்வழக்கு 2021 மார்ச் 01ஆம் தேதி மேற்படி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்நிலத்தை திருப்பூர் மாநகராட்சி அலுவலர்களும், தெற்கு தாசில்தாரும், அதிமுக முன்னாள் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரனின் சீரிய முயற்சியில் கம்பிவேலி அமைத்து பாதுகாப்பு செய்தனர்.

பின்னர் அப்பகுதி அஇஅதிமுக கவுன்சிலர் எம்.கண்ணப்பன், அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு இணங்க அந்த இடத்தில் அப்பகுதி மக்களுக்கான மேல்நிலைப் பள்ளி கட்டடம் கட்ட ஆவண செய்து, அது சம்பந்தமாக பணிகளில் ஈடுபட்டிருந்த போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள அந்த நிலத்தை ஒரு சிலர் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக அறிகிறோம். எனவே பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த அரசு நிலத்தை பாதுகாக்கவும், அந்நிலத்தில் பள்ளி கட்டடம் அமைத்து அப்பகுதி மக்கள் பயன்பட வழிவகை செய்து கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை.. கோடாரியால் அடித்து நொறுக்கியவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.