ETV Bharat / state

சனாதனம் குறித்து பேசியதில் என்ன தவறு; ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் பதில்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 9:05 PM IST

Updated : Sep 4, 2023, 9:27 PM IST

Udhayanidhi Stalin said nothing wrong with what I said about Sanatana dharma why Sekar Babu need to resign
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

Udhayanidhi Stalin: டெங்கு, மலேரியா, கரோனா போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையான நிலையில், நான் பேசியதில் தவறில்லை, அந்த நிகழ்ச்சியில் பேசியதைத் தான் நான் திரும்ப திரும்ப பேசுவேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

தூத்துக்குடி: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாகச் சென்னை தேனாம்பேட்டையில் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, டெக்கு, மலேரியா, கரோனா போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சிற்கு மாநில அளவில் மட்டும் அல்லாமல் மத்தியிலிருந்தும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இது குறித்து அவரது X சமூக வலைத்தள பக்கத்தில் , “சென்னையில், சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் பிழைப்புவாதிகள் நடத்திய கூட்டமொன்றில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, இந்து மதமும் சனாதன தர்மமும் வேறுவேறல்ல, இரண்டும் ஒன்றுதான். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பேசினார்.

அவருக்குப் பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இவர்களது நோக்கம் என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை. ஆனால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் பேசிய அதே கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டதும், இவர்கள் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமலிருந்ததும் அதிர்ச்சியளிக்கிறது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை அவர் இழந்து விட்டார். இன்னும் ஒரு வாரக் காலத்தில், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், தனது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து சேகர்பாபு பதவி விலக வேண்டும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை? வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், சேகர்பாபு அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றால், செப்டம்பர் 11 ஆம் தேதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனப் பதிவிட்டு உள்ளார்.

சனாதனம் குறித்துப் பேசியதைத் திரும்பவும் பேசுவேன்: இந்நிலையில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்னையிலிருந்து தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வந்தார். அப்போது அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நேற்று முந்தினம் அந்த நிகழ்ச்சியில் பேசியதை தான் திரும்ப திரும்ப பேசுவேன், இன்னும் அதிகமாக பேசுவேன்.

அந்த கூட்டத்தில் பேசும் போதே நான் சொன்னேன், நான் இந்த மேடையில் நிறைய விஷயங்களைப் பேச போகிறேன், சனாதனத்தைப் பற்றி பேச போகிறேன், பல பேருக்கு வயிற்று எரிச்சல் இருக்கும் எனக் கூறினேன். நான் நினைத்தது நடந்திருக்கிறது. அன்னைக்குத் தெளிவாக சொல்லிவிட்டேன். நிலையானது, எதுமே மாற்றம் பண்ண முடியாதது தான் சனாதனம் என அதற்கு ஒரு அர்த்தம் சொல்லுகிறார்கள்.

பெண்களை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என கூறினார்கள், ஆனால் வெளியில் வந்திருக்கிறார்கள். பெண்கள் படிக்கக்கூடாது என சொன்னார்கள், திராவிடம் தான் பெண்களுக்குப் படிப்பைக் கொடுத்தது. இப்ப காலை உணவுத் திட்டம் கூட மாணவிகள் வெளியில் வந்து படிக்க வேண்டும் என்பதற்காகத் தான். மாணவிகள் வந்து படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் புதுமைப் பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களைத் தலைவர் கொண்டு வந்திருக்கிறார்கள்.

பெண்களை அடிமைப்படுத்தி இருந்தது தான் சனாதனம். பெண்கள் மேலாடை அணியக்கூடாது என சொன்னார்கள், கணவன் இறந்த உடன் உடன்கட்டை ஏற வேண்டும் என சொன்னார்கள்; இதெல்லாம் தான் சனாதனம். இதனால் தான் நான் ஒழிக்க வேண்டும் என சொன்னேன். அதை நான் தொடர்ந்து சொல்வேன்” எனக்கூறினார்.

  • சென்னையில், சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் பிழைப்புவாதிகள் நடத்திய கூட்டமொன்றில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் திரு. வீரமணி அவர்கள், இந்து மதமும் சனாதன தர்மமும் வேறுவேறல்ல, இரண்டும் ஒன்றுதான். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பேசினார். அவருக்குப் பின்னர் பேசிய அமைச்சர்… pic.twitter.com/hPJzfTI6QB

    — K.Annamalai (@annamalai_k) September 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், உதயநிதி ஸ்டாலின் பேசும் போது அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்ததால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என அண்ணாமலை பதிவிட்டுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “நான் பேசியதில் தவறில்லை, நான் எல்லா மதத்தையும் சேர்த்துத் தான் பேசினேன். நான் இந்து சமயத்தை மட்டும் பேசவில்லை, அனைத்து மதங்களுக்கும் பொதுவாகத்தான் பேசினேன். எந்த மதத்திலும் இந்த மாதிரி பிரித்து பார்த்தீர்கள் என்றால் அதைத் தான் நான் கண்டித்து பேசியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Annamalai Vs Udhayanidhi: வடக்கே ராகுல் காந்தி, தெற்கே உதயநிதி ஸ்டாலின் - அண்ணாமலை விமர்சனம்..

Last Updated :Sep 4, 2023, 9:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.