ETV Bharat / state

நிதி இல்லாததால் தூத்துக்குடி- மதுரை இடையே ரயில் பாதை திட்டம் கைவிட முடிவு?.. பயணிகள் அதிருப்தி!

author img

By

Published : Aug 19, 2023, 12:28 PM IST

Tuticorin to Madurai railway project
தூத்துக்குடி- மதுரை இடையே ரயில் பாதை திட்டம்

Tuticorin to Madurai railway project: நிதி பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி- மதுரை இடையே அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் கைவிட முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலால் பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நிதி இல்லாததால் தூத்துக்குடி- மதுரை இடையே ரயில் பாதை திட்டம் கைவிட முடிவு என தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம்,அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிதாக அகல ரயில் பாதை அமைக்கும் திட்டம் கடந்த 1999 - 2000 ஆம் ஆண்டு மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து மீளவிட்டான், மேல்மருதூர், குளத்தூர், விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், பந்தல்குடி, அருப்புக்கோட்டை, கல்குறிச்சி, காரியாப்பட்டி, ஆவியூர், பாறைப்பட்டி, திருப்பரங்குன்றம் வழியாக மதுரை வரை 143.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் வகையில் இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டது.

இதில் முதல் கட்டமாக, தூத்துக்குடி, மீளவிட்டான் மேல்மருதூர் வரை 18 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.260 கோடி செலவில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டன. இதையடுத்து இப்பாதையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி ரயில் என்ஜினை 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து, இந்த திட்டத்தில் அடுத்தக் கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் தூத்துக்குடி - மதுரை புதிய ரயில் பாதை திட்டத்தை போதிய நிதி இல்லாத காரணத்தால் நிறுத்தி வைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர், ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்தி தூத்துக்குடி மாவட்ட பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தெற்கு ரயில்வேயின் இந்த முடிவுக்கு எதிராக பலரும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். தூத்துக்குடி - மதுரை இடையேயான புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிடக் கூடாது எனவும், தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மேலும், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டெல்லியில் நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு ஒன்றை கூட அளித்துள்ளார். இது தொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட பயணிகள் நல ஆலோசனை குழு உறுப்பினர் பிரம்மநாயகம் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது, "தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, மதுரை புதிய வழித்தடம் 23 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் புத்துயிர் பெற்று 10 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது வரை இந்த திட்டத்திற்காக சுமார் ரூ.300 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டு தூத்துக்குடி மீளவிட்டான், மேல்மருதூர் வரை 18 கிலோ மீட்டர் தூரம் பணிகள் முடிந்து சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டது.

இதனைத் தாண்டி சில இடங்களில் பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மேலும் சென்ற ஆண்டு கூட 70 கோடி ரூபாய் சிறு பாலங்கள் கட்ட டெண்டர் கோரப்பட்டு அதற்குண்டான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதேபோல் சென்ற ஆண்டு ரயில்வே பட்ஜெட்டிலும் ரூ.114 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திடீரென்று இந்த ரயில் சேவை திட்டத்தை நிறுத்துவதாக தெற்கு ரயில்வே கூறியதாக தகவல் வந்தன.

தயவுசெய்து ரயில்வே நிர்வாகம் இதனை கைவிட வேண்டாம். இத்திட்டம் ஒரு வளமான திட்டம், தமிழ்நாட்டில் 10 மாவட்டங்கள் பயன்பெறும் திட்டம், இத்திட்டம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த திட்டத்தை புறக்கணிக்காமல் 500ல் இருந்து 1,000 கோடி ரூபாய் வரை ஒதுக்கினால் மட்டுமே முழுமையாக நிறைவடையும். இத்திட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து பணிகளை வேகமாக முடித்து விரைவில் ரயில் போக்குவரத்து ஆரம்பிக்க வேண்டும்" என ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி கேட்டு கொண்டார்.

மேலும், பயணிகள் நல சங்க நிர்வாகியான அந்தோணி முத்துராஜா கூறுகையில், "தூத்துக்குடி, மீளவிட்டான் மேல்மருதூர், குளத்தூர், விளாத்திகுளம், நாகலாபுரம் புதூர், பந்தல்குடி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருப்பரங்குன்றம் வழியாக மதுரை செல்லும் இவ்வழி தடத்தை 1999ஆம் ஆண்டு வாஜ்பாய் கொண்டு வந்தார். இது வரவேற்கத்தக்கத் திட்டம்.

மீளவிட்டான் இருந்து மேல்மருதூர் வரை 15 கிலோ மீட்டர் தூரம் பணிகள் முடிந்து விட்டது. இதுவரை இத்திட்டத்திற்கு 311 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 120 கோடி செலவழிக்கப்பட்டு உள்ளது. மீதி 77 கோடி ரூபாய்க்கு அருப்புக்கோட்டையில் பாலம் அமைக்க டெண்டர் விடப்பட்டு வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதுபோக பட்ஜெட்டில் 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் 2024 பட்ஜெட்டில் மத்திய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கினால் அருப்புக்கோட்டை வரை ரயில் இயக்கி விடலாம். அருப்புக்கோட்டை சென்று விட்டால் அங்கிருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக சென்னை சென்று விடலாம்.

மேலும், காரைக்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் சென்று சென்னை சேரலாம். ஏற்கனவே திருத்துறைப்பூண்டி திருவாரூர் ஆகிய ஊர் மக்களுக்கு ரயில் சேவை இல்லாத பட்சத்தில், இங்கிருந்து ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டால் பல மாவட்டங்கள் பயன் பெறும்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளத்தை சுற்றி 20 கிராமங்களும், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மக்கள் தொகை அதிகம் உள்ள சாயல்குடி பகுதி மக்களும் ராமநாதபுரம் செல்லாமல் விளாத்திகுளத்தில் ரயில் சேவையை பயன்படுத்துவர். ஆகவே, மத்திய அரசு இத்திட்டத்தை நிறுத்தாமல் நிதி ஒதுக்கி இச்சேவையை விரைவாக முடித்து தர வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: IRCTC: போலி ஐஆர்சிடிசி ஆப் மூலம் பயணிகளை குறிவைத்து பலே மோசடி.. எச்சரிக்கும் சைபர் போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.