ETV Bharat / state

நடுக்கடலில் கடும் காற்று... எங்களின் அழுகுரலை இந்த அரசு எப்போது கேட்கும்?

author img

By

Published : Oct 13, 2020, 2:17 PM IST

fishermen
fishermen

தூத்துக்குடி: நடுக்கடலில் கடும் காற்று வீசியதால் 140 விசைப்படகுகளோடு கரை திரும்பிய மீனவர்கள், மீன்வளத் துறை அலுவலர்கள் முறையாகத் தகவல் தெரிவிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினர்.

மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை, கடல் சீற்றம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அதனடிப்படையில், மீன்வளத் துறை வெளியிட்ட அறிவிப்பில் மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மீன்வளத் துறை சார்பில் மீனவர்களுக்கு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு வந்த மீனவர்கள் எச்சரிக்கை பலகை அகற்றப்பட்டபட்டிருப்பதைக் கண்டு 140 படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். ஆழ்கடலில் வீசிய கடும் காற்று காரணமாக மீனவர்கள் கரை திரும்பினர்.

கரை திரும்பிய விசைப்படகு தொழிலாளர்கள், எச்சரிக்கை தகவல் தங்களுக்கு முறையாக தெரிவிக்கவில்லை எனக் கூறி மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எச்சரிக்கை பலகை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குச் செல்லலாமா, வேண்டாமா? என்ற குழப்பத்தில் 140 படகுகளில் கடலுக்குச் சென்று கடும் காற்று காரணமாக அனைவரும் திரும்பி வந்துவிட்டோம். வானிலை எச்சரிக்கை குறித்து மீன்வளத் துறை அலுவலர்கள் முறையாகத் தகவல் தெரிவிக்காததால், ஒரு படகுக்கு 35 ஆயிரம் வரை இன்று செலவு செய்துள்ளோம்.

இந்த இழப்பினை மீன்வளத் துறை அலுவலர்கள் எங்களுக்கு ஈடு கட்டுவார்களா? இது தவிர நாள் ஒன்றுக்கு விசைப்படகு தொழிலாளிக்கு ஆயிரத்து 500 ரூபாய் படியாக வழங்கப்படுவதும் இன்றைய தினம் தடைப்பட்டுள்ளது.

பொதுவாக புயல் மழை காலங்களில் வானிலை எச்சரிக்கை குறித்த நோட்டீஸ் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என நாங்கள் ஏற்கனவே மீன்வளத் துறை அலுவலரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

எங்கள் உயிருக்கு யார் உத்தரவாதம்

எங்களில் யாருக்கேனும் உயிரிழப்பு ஏற்பட்டால் அந்த உயிர் இழப்பை ஈடுகட்ட இந்த அரசும் அலுவலர்களும் தயாரா, யார் இதற்கு பதில் சொல்லுவார்கள், மாவட்ட ஆட்சியர் பதில் கூறுவாரா?" எனக் கேள்வி எழுப்பினர்.

இதையும் படிங்க: தாய் இறந்த துக்கம் தாளாமல் தேம்பி அழும் முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.