ETV Bharat / state

இடப் பிரச்சினையில் இரு தரப்பு தகராறு! காவல் நிலையத்தில் கைதானவர் தற்கொலைக்கு முயற்சி? கோவில்பட்டியில் பரபரப்பு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 10:28 PM IST

Updated : Dec 16, 2023, 9:34 AM IST

prisoner-tried-to-commit-suicide-by-drinking-phenyl-at-kovilpatti-west-police-station-relatives-protest-against-police
காவல்நிலையத்தில் பினாயிலை குடித்து கைதி தற்கொலைக்கு முயற்சி? கோவில்பட்டியில் பரபரப்பு..!

Prisoner tried to commit suicide: இடப்பிரச்சனை தொடர்பாக கைது செய்யப்பட்டவர் காவல் நிலைய கழிவறையில் தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படும் நிலையில், அவரை விடுதலை செய்யக் கோரி உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவத்தால் கோவில்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இடப் பிரச்சினையில் இரு தரப்பு தகராறு

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சூசைமாணிக்கம். இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவருக்கும் ராஜீவ் நகரை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் இடையே ராஜீவ் நகரில் உள்ள இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரவில் பிரச்சினைக்குரிய இடத்தில் சந்தியா தரப்பினர் திடீரென ஒரு அறையை எழுப்பியதாக தெரிகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சூசைமாணிக்கம் தரப்பினர் பிரச்சினைக்குரிய இடத்தில் கட்டப்பட்டு இருந்த அறையை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் சந்தியா தரப்பில் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, மேற்கு காவல் நிலைய போலீசார் சூசைமாணிக்கம், அவரது மனைவி கமலி, அவர்களது உறவினர்கள் சிரஞ்சிவி, தாமரைச்செல்வி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இதேபோன்று, பாண்டவர்மங்கலத்தை சேர்ந்த விஜயன் என்பவருக்கு சொந்தமான நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதாக கொடுத்த மற்றொரு புகாரின் பேரிலும் சூசைமாணிக்கம், அவரது மனைவி கமலி, அவர்களது உறவினர்கள் சிரஞ்சிவி, தாமரைச்செல்வி மற்றும் பாண்டவர்மங்கலத்தை சேர்ந்த ஏசுரத்தினம், கருப்பசாமி உள்ளிட்ட 6 பேர் மீது மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இந்த 2 வழக்குகள் தொடர்பாக, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக போலீசார் சென்றபோது சூசைமாணிக்கம், அவரது மனைவி கமலி, அவர்களது உறவினர்கள் சிரஞ்சிவி, தாமரைச்செல்வி ஆகியோர் போலீசாருடன் காவல் நிலையத்திற்குள் வரமறுத்தது மட்டுமின்றி, வாக்குவாதத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் 4 பேரையும் வலுக்கட்டயமாக ஆட்டோவில் ஏற்றி, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி 4 பேரையும் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, அங்குள்ள கழிவறைக்கு சென்ற சூசைமாணிக்கம், திடீரென தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சூசைமாணிக்கத்தை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்தும் நேற்றிரவு (டிச. 14) சூசைமாணிக்கத்தின் இரு மகள்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, திடீரெனெ போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் லேசான பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் உள்ளிட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்கள் தரப்பிலும் புகார் கொடுங்கள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்த நிலையில் போராட்டத்தை கைவிட்டனர்.

இதன்பின்னர் கைது செய்யப்பட்ட கமலி, சிரஞ்சிவி, தாமரைச்செல்வி ஆகியோர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சூசைமாணிக்கம் மட்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இடப்பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, சந்தியா தரப்பினர் அத்துமீறி இடத்திற்குள் புகுந்து அறை கட்டியதாகவும், அவர் மீது புகார் கொடுத்தும் காவல் நிலையத்தில் கண்டு கொள்ளவில்லை, ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற தங்கள் மீது போலீசார் வழக்கு பதிவ செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

சூசைமாணிக்கம் தற்கொலைக்கு முயன்றதாக தெரிந்ததும், அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க கேட்டபோது, முதல் தகவல் அறிக்கையில் கையெழுத்து போட்டால் தான் சிகிச்சைக்கு அனுமதிக்க முடியும் என போலீசார் கட்டயாப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்க சென்ற தங்களது செல்போனையும் பறித்து கொண்டதாகவும், உண்மையில் சூசைமாணிக்கம் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது காவல்துறையினர் சித்ரவதை செய்தனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இடம் தொடர்பான பிரச்சினையில் காவல்துறையினர் தலையீட சட்டத்தில் இடம் இல்லை என்றும், பட்டியல் சமூகம் என்பதால் காவல்துறையினர் இவ்வாறு தங்களை நடத்துவதாகவும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது தமிழக அரசு தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூசை மாணிக்கத்தின் உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கேட்டபோது, சூசைமாணிக்கம் எதுவும் குடிக்கவில்லை, அவர் நடிப்பதாகவும், மருத்துவ அறிக்கையில் உண்மை என்னவென்று தெரியவரும் என்றும், சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட அறையை சேதப்படுத்தியதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அங்கு விசாரணை நடத்த சென்றபோது சூசைமாணிக்கம், அவரது மனைவி கமலி, அவர்களது உறவினர்கள் சிரஞ்சிவி, தாமரைச்செல்வி இருந்ததாகவும் கூறினர்.

இவர்கள் மீது ஏற்கனவே, விஜயன் என்பவர் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்ததால், 4 பேரையும் கைது செய்ய முயன்ற போது காவல் துறையினரை அவதூறாக பேசியதாகவும், வேறு வழியில்லமால் அவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த இடம் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், சந்தியா தரப்பினர் கட்டடம் கட்டியது தொடர்பாக புகார் கொடுத்தால் அதன்மீதும் நடவடிக்கை எடுக்கிறோம் என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். ஆனால், சூசை மாணிக்கம் தரப்பினர் எவ்வித ஒத்துழைப்பு தரவில்லை என்றும், அனைத்திற்கும் ஆதராங்களாக சிசிடிவி காட்சிகள் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கைதான சூசைமாணிக்கத்தின் மகள் ஜெயமதி கூறுகையில், "எனது அப்பா, நாளொன்றுக்கு தினமும் 30 பேருக்கு உணவு வழங்கி சேவையாற்றுபவர். இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இடம் எங்களது குடும்பத்தின் பூர்வீக சொத்து. காவல்நிலையத்தில் எனது அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனபோதும், மூன்று மணிநேரமாக அவரை நெருங்கவிடாமல் எங்களை கண்ணீர் சிந்திய நிலையில் போலீசார் நிறுத்தி வைத்திருந்தனர்.

நர்ஸாக உள்ள எனது சகோதரியை மட்டும் அப்பாவின் அருகே விடுங்கள், பரிசோதித்துப் பார்க்கட்டும் என்று கண்ணீர் மல்க கெஞ்சி கதறிய போதும், போலீசார் அனுமதிக்கவில்லை. உயிருக்குப் போராடிய நிலையில், எனது அப்பா இருக்கும்போது அவரை காப்பாற்ற வேண்டுமெனில், முதல் தகவல் அறிக்கையில் கையெழுத்திட வேண்டுமென போலீசார் அவரது உயிரையும் பொருட்படுத்தாமல் நிர்பந்தித்தனர்" என்று தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: ஈரோடு அருகே மதுபோதையில் ஹோட்டலில் தகராறில் ஈடுபட்ட கும்பல்.. ஊழியரை சரமாரியாக தாக்கும் வீடியோ வைரல்!

Last Updated :Dec 16, 2023, 9:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.