பூட்டிய வீட்டில் மூதாட்டி வெட்டி கொலை... கோவில்பட்டியில் நடந்த பயங்கரம்!

பூட்டிய வீட்டில் மூதாட்டி வெட்டி கொலை... கோவில்பட்டியில் நடந்த பயங்கரம்!
Old woman hacked to death in Thoothukudi: கோவில்பட்டியில் பூட்டிய வீட்டில் மூதாட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகைக்காக நடந்த கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள வடக்கு திட்டங்குளம், பூந்தோட்ட காலனி பகுதியை சேர்ந்த குருசாமியின் மனைவி முத்துலெட்சுமி (வயது 65). குருசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் முத்துலெட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். மூதாட்டி முத்துலெட்சுமி, நேற்று (நவ.19) காலை விசேஷ நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்த நிலையில், அவர் வீட்டை விட்டு வெளியே வராததைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், மாலையில் வீட்டின் கதவை தட்டி உள்ளனர்.
நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாமல் இருந்ததால், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் பின்வாசல் படிக்கட்டு அருகே, கழுத்தில் வெட்டப்பட்டு இரண்டு விரல்கள் வெட்டப்பட்டு, கொலை செய்யப்பட்ட நிலையில் மூதாட்டி இறந்து கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக கோவில்பட்டி கிழக்கு காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மூதாட்டி முத்துலெட்சுமியின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த முத்துலெட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த மூன்று நகை திருடப்பட்டு இருப்பதும், அவர் விரலில் அணிந்திருந்த மோதிரம் திருடப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
பின்னர், இது நகைக்காக நடந்த கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இந்த கொலை நடைபெற்றதா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். கோவில்பட்டியில் பூட்டிய வீட்டில் மூதாட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
