தூத்துக்குடி: முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் (VAO) பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ், கடந்த ஏப்ரல் 25 அன்று மர்ம நபர்களால் அவரது அலுவலகத்தில் வைத்தே சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த முறப்பநாடு போலீசார், கலியாவூர் வேதகோயில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் ராம சுப்பிரமணியன் என்ற ராமசுப்பு (41) மற்றும் முருகன் மகன் மாரிமுத்து (31) ஆகியோரை கைது செய்தனர்.
தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர் காவல் துறையில் புகார் அளித்ததால் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர், வழக்கு எண் 449 கடுமையான ஆயுதங்களுடன் அத்து மீறி நுழைதல், 302 கொலை, 506 ஆயுதங்களுடன் மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷ் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக 52 சாட்சிகள் அடையாளம் காணப்பட்டு, 31 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாள், இரும்பு ராடு உள்ளிட்ட 13 பொருட்கள் குறியீடு செய்யப்பட்டன.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது நபர் மாரிமுத்து என்பவர் தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும், தனக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை எனவும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு அளித்தார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன்தாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம் மாரிமுத்துவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த வழக்கு விசாரணையில் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்ஸிஸ் மகன் ஏசுவடியான், கிராம நிர்வாக உதவியாளர் கணேசன் அருணாச்சலம், ஆறுமுகம், பிரின்ஸ் உள்ளிட்டோர் கடந்த ஆகஸ்ட் 21 அன்று நீதிமன்றத்தில் சாட்சிகளாக ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (செப் 15) தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செல்வம் முன் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் ராமசுப்பு, மாரிமுத்து ஆகியோருக்கு வழக்கு எண் 449-இன் படி 5 வருடம் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதேநேரம், அதை கட்ட தவறினால் 1 மாதம் சிறை தண்டனை, வழக்கு எண் 302-இன் படி, ஆயுள் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதம், அதை கட்டத் தவறினால் 3 மாதம் சிறை தண்டனை, வழக்கு எண் 506-இன் படி 1 ஆண்டு சிறை தண்டனை என விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், ராமசுப்பு மீது கொலை முயற்சி உள்பட 15 வழக்குகளும், மாரிமுத்து மீது கொலை முயற்சி உள்பட 6 வழக்குகள் உள்ளன. 1 மாத காலத்தில் விசாரணை நடத்தப்பட்டு முடிக்க வேண்டிய இந்த வழக்கு, 24 நாளில் முடிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - ஆஜராகாத அமலாக்கத்துறையால் வழக்கு ஒத்திவைப்பு!