ETV Bharat / state

வெள்ளம் சூழ்ந்த தூத்துக்குடி: நாள்தோறும் சாலை மறியலால் திணறும் அலுவலர்கள்

author img

By

Published : Jan 16, 2021, 11:37 PM IST

rainflood
வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் குடியிருப்புகள்

தூத்துக்குடி: குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் தொடர்ந்து சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் 6 நாள்களாக இரவு- பகலாக இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கிகிடக்கிறது.

போக்குவரத்து முடக்கம்

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் மழை நீர் தேங்கியதாலும், ஸ்மார்ட் சிட்டி சாலை பணிகள் நடப்பதாலும் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் பிரையண்ட் நகர் வழியாக சுற்றி சென்று வருகின்றன. இதனிடையே பிரையண்ட்நகர் பகுதியிலும் முழுக்க தண்ணீர் தேங்கி நிற்பதால், மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

திருச்செந்தூர், சிவந்தாகுளம் ஆகிய சாலைகளின் சந்திப்பு பகுதியில் நீண்ட நாள்களாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது அங்கு சுமார் 1 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீருடன் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிலர் கழிவுநீரில் வாகனத்துடன் விழும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பக்கிள்புரம் வழியாக சென்று வருகின்றனர்.

குடியிருப்புப் பகுதியில் வெள்ளம்

தூத்துக்குடியில் பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. பெரும்பாலானோர் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு மேடான பகுதிகளில் உள்ள தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளனர். பல ஆயிரக்கணக்கான வீடுகளை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் வீட்டில் இருந்து வெளியில் வர முடியாத நிலையில் ஏராளமான மக்கள் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.

வெள்ளம் சூழ்ந்த தூத்துக்குடி

தனசேகர் நகர், முத்தம்மாள் காலனி, ஸ்டேட் வங்கி காலனி, செல்வநாயகபுரம், லூர்தம்மாள்புரம், குறிஞ்சிநகர், செயிண்ட் மேரிஸ் காலனி, பிரையண்ட்நகர் உள்பட பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகள் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், மழை வெள்ளத்தை அகற்ற நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தினை கண்டித்து மக்கள் தினம்தினம் சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.

rainflood
வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் குடியிருப்புகள்

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி தீர்வுக்காக 2 பெரிய பைப்புகளை பதித்து தேங்கிய மழைநீர் கொண்டு செல்ல மாநகராட்சி சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இருப்பினும் மூன்று அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி இருப்பதனால் தண்ணீரை வடிப்பதில் சிரமம் இருந்துவருகிறது.

மழை நீர் தேங்கிய அனைத்து பகுதிகளிலும் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு மாநகராட்சி அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:இயல்பு நிலைக்கு திரும்பும் நெல்லை: முடுக்கிவிடப்பட்ட சீரமைப்பு பணிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.