ETV Bharat / state

திருமணம் செய்துவிட்டு தலைமறைவான காவலர்; நள்ளிரவில் பெண் காவலர் தர்ணா போராட்டம்!

author img

By

Published : Aug 8, 2023, 1:33 PM IST

பதிவு திருமணம் செய்து விட்டு தலைமறைவான காவலர் வீட்டின் முன்பு பெண் காவலர் நள்ளிரவில் தர்ணா போராட்டம்
பதிவு திருமணம் செய்து விட்டு தலைமறைவான காவலர் வீட்டின் முன்பு பெண் காவலர் நள்ளிரவில் தர்ணா போராட்டம்

திருவாரூர் மாவட்டம் தண்டலையில் பதிவு திருமணம் செய்து விட்டு தலைமறைவான காவலர் வீட்டின் முன்பு பெண் காவலர் நள்ளிரவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

பதிவு திருமணம் செய்து விட்டு தலைமறைவான காவலர் வீட்டின் முன்பு பெண் காவலர் நள்ளிரவில் தர்ணா போராட்டம்

திருவாரூர்: தண்டலை வடக்குத் தெருவை சேர்ந்த கோவிந்தராஜன் கலா தம்பதியினரின் இளைய மகன் அஜித் (வயது 28). இவர் சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டின் முன்பு காவ்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் அஜித் தன்னை பதிவு திருமணம் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டதாக கூறி நள்ளிரவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

29 வயதான காவ்யா பி.காம் மற்றும் எம்.பி.ஏ முடித்த பட்டதாரி ஆவார். இவர் சென்னை பெருநகர காவல் ஆயுதப் படையில் இரண்டாம் நிலை காவலராக அஜித்துடன் பணிபுரிந்தவர் ஆவார். அஜித்தும், காவ்யாவும் ஒரே பள்ளியில் படித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு முகநூலில் நண்பர்களாக இருந்தவர்கள் மீண்டும் சென்னையில் சந்திக்கும் போது நண்பர்களாக பழகி மூன்று வருட காலமாக காதலித்து வந்ததாகவும் ஒரே வீட்டில் தங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், கடந்த 2022 இல் டிசம்பர் மாதத்தில் காவ்யா மூன்று மாதம் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதே மாதம் டிசம்பர் 11 இல் விழுப்புரத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது டிசம்பர் 10 ஆம் தேதி தான் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறி அஜித் திருவாரூர் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மற்றொரு பெண்ணை பார்த்து அஜித்துக்கு பெற்றோர்கள் பேசி முடித்துள்ளனர்.

தொடர்ந்து அஜித்துக்கு பார்த்த பெண் அஜித் உடன் வாட்ஸ் அப்பில் தொடர்பில் இருந்துள்ளார். இதனை கண்டறிந்த காவ்யா அவர்களது குடும்பத்தில் இது குறித்து கூறியுள்ளார். இதனால் அஜித்திற்கும் காவ்யாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அஜித் தனது நண்பர் மூலம் திருவாரூரில் இருந்து கருக்கலைப்பு மாத்திரையை கொரியர் மூலம் வாங்கி, அதை வாந்தி சரியாவதற்கான மாத்திரை என்று காவ்யாவிடம் கொடுத்து கருக்கலைப்பு செய்ததாக காவ்யா கூறுகிறார்.

அதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை டிசியிடம் காவ்யா புகார் அளித்தவுடன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவருக்கு முன்பு உறுதி அளித்து விட்டு ஒரு மாத காலம் அஜித் தலைமறைவாக இருந்துள்ளார். இதனையடுத்து சென்னை தெற்கு மண்டல இணை ஆணையரிடம் காவ்யா புகார் அளித்துள்ளார். அப்போது சி.எஸ்.ஆர் போடப்பட்ட நிலையில் திருமணம் செய்து கொள்வதாக அஜித் ஒத்துக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இந்த புகாரை அனுப்பி உள்ளனர். அங்கு மார்ச் 8 ஆம் தேதி இரண்டு நாட்களில் இருவரும் திருமணம் செய்து கொண்டு பதிவு சான்றிதழை காட்டுகிறோம் என்று அஜித் உறுதியளித்துள்ளார். அதனை அடுத்து இருவரும் மார்ச் 10 ஆம் தேதி மண்ணடி மாரியம்மன் கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அப்போது காவ்யாவின் பெற்றோர் அஜித்தின் நண்பர்கள் உடன் இருந்துள்ளனர். தொடர்ந்து பெரியமேடு சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்துள்ளனர். திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் பிரச்சனைகளுக்கிடையில் திருமணம் நடந்ததால் மன உளைச்சலாக இருப்பதாக கூறி நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு வருகிறேன் என்று அஜித் கூறியுள்ளார். ஆனால் அவர் திரும்ப வரவில்லை என்று கூறப்படுகிறது.

காவ்யா அஜித்துக்கு போன் செய்தால் வந்துவிடுகிறேன் என்று கூறியபடி இருந்துள்ளார். இது குறித்து நேரில் சென்று காவ்யா கேட்டதற்கு அவரை சீருடையில் இருக்கும் போதே அடித்து பூட்ஸ் காலால் மிதித்ததாக காவ்யா கூறுகிறார். தற்போது கடந்த மூன்று மாதமாக பணிக்கு வராமல் தலைமறைவாக இருப்பதாக கூறி அஜித் வீட்டின் முன்பு நள்ளிரவில் காவ்யா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் வேறு இடத்தில் நான் பெண் பார்த்து இருந்தால் எனக்கு வரதட்சணை கிடைத்திருக்கும் உன்னை கல்யாணம் செய்து என்ன கிடைத்தது என்று அஜித் கூறியதாக காவ்யா தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் தாலுகா காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி நள்ளிரவு இரண்டு மணி வாக்கில் காவ்யாவை அழைத்துச் சென்று உறவினர் வீட்டில் விட்டுள்ளனர்.

மேலும் இது குறித்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை புகார் அளிக்க உள்ளதாக காவ்யா தெரிவித்துள்ளார். இது குறித்து காவ்யா, தனது புகைப்படத்தை தவறாக சித்தரித்து முகநூல் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அஜித் பதிவேற்றுவதாகவும், மேலும் அஜித்தின் குடும்பத்தார் தனது நடத்தை குறித்து மிக மோசமாகவும் அவதூறாகவும் பேசி தன்னை நிராகரிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஆண் காவலர் அஜித்திடம் பேசும் போது “எனக்கும் காவ்யாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் எனது அக்காவின் வகுப்புத் தோழி அந்த அடிப்படையில் நான் அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று விடுவேன்.

மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னை கட்டாயப்படுத்தி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணம் செல்லாது என நான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மாதம் 20 நாள்கள் திருட்டு, 10 நாள்கள் சுற்றுலா; நகை திருட்டு கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.