ETV Bharat / state

மாதம் 20 நாள்கள் திருட்டு, 10 நாள்கள் சுற்றுலா; நகை திருட்டு கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!

author img

By

Published : Aug 7, 2023, 10:34 PM IST

சாலை விபத்தில் காவல் துறையினர் பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தவர்களை கைது செய்து, 50 சவரன் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

கோயம்புத்தூர் மாநகரில் கடந்த சில நாட்களாக தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நகை பறிப்பு திருடர்களைப் பிடிக்க உத்தரவிட்டார். உதவி ஆணையர் ரவி தலைமையில், காவல் ஆய்வாளர் கண்ணையன், மற்றும் உதவி ஆய்வாளர் மாரிமுத்து, உமா, காவலர்கள் கார்த்தி, பூபதி, முத்துராமலிங்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் மாநகரில் பல்வேறு இடங்களில் சாதாரண உடையில் ரோந்து சென்று கண்காணித்து வந்தனர். அப்போது டவுன் ஹாலில், 3 பெண்கள் அவசர அவசரமாக ஓடிச்சென்று ஆட்டோவில் ஏறி செல்வதை போலீசார் பார்த்தனர். அந்த ஆட்டோ போக்குவரத்து நெரிசலுக்கு இடையே சென்றதால் அவர்களால் உடனே பிடிக்க முடியவில்லை. பின் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, அந்த ஆட்டோவின் எண்ணை கைப்பற்றினர். ஆட்டோவின் விவரங்களை சேகரித்து ஓட்டுநரிடம் விசாரித்தனர்.

அதில் மூன்று பெண்களை அரசு மருத்துவமனையில் இறக்கிவிட்டதாகவும், 100 ரூபாய் வாடகைக்கு, 200 ரூபாய் தந்ததாகவும் ஓட்டுநர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிறுத்தத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் அந்த பெண்கள் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஒரு பையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்ததும், அங்கு ஒரு இளைஞரிடம் போனை வாங்கி பேசிய பின்னர் பேருந்தில் ஏறிச் சென்றதும் பதிவாகி இருந்தது.

பின் போலீசார் அந்தப் பெண்களிடம் போனை கொடுத்த நபரை கேமராவில் கண்காணித்தனர். அதில் அவர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் உள்ள ஒரு பெண்ணிடம், 15 நிமிடங்கள் பேசிச் சென்றது பதிவாகி இருந்தது. போலீசார் அந்த இளைஞரின் போட்டோவை எடுத்துக்கொண்டு அரசு மருத்துவமனையில் உள்ள, 4 வார்டிலும் சென்று விசாரித்தபோது அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த ஒரு பெண்ணின் உறவினர் என்பதும், அவர் திருப்பூரில் வசித்து வருவதும் தெரியவந்தது.

அவரின் முகவரியை பெற்றுக்கொண்டு போலீசார் திருப்பூர் விரைந்தனர். அங்கு அந்த இளைஞரிடம் விசாரித்து அவரது போன் மூலம் அந்த பெண்கள் பேசிய எண்ணை கைப்பற்றினர். அந்த போன் எண்ணில் உள்ள இடத்தைப் பார்த்த போது, அது மேட்டுப்பாளையத்தில் உள்ள சொகுசு விடுதியை காட்டியது. போலீசார் அங்கு சென்ற போது அந்த நபர் விடுதியை காலி செய்து சென்று விட்டதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பின் அந்த போன் எண் யாருடையது என்ற விவரத்தை சேகரித்து, தொடர்ந்து அந்த போன் எண்ணை டிராக் செய்த போது அந்த செல்போன் பெங்களூரில் இருப்பதாக காட்டியது. பெங்களூர் செல்ல திட்டமிட்ட போது அந்த போன் எண் சென்னைக்கு திரும்பியது. சென்னையில் தொடர்ந்து போன் எண் இருந்ததால் தனிப்படை போலீசார் ஜேப்படி கும்பலை பிடிக்க சென்னைக்கு போலீஸ் வேனில் விரைந்தனர். அப்போது போலீஸ் வேன் சேலம் அருகே சென்றபோது விபத்துக்குள்ளாகி போலீசார் பலத்த காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் சேலத்தில் சிகிச்சைப் பெற்று கோவை திரும்பினர். ஆனாலும் போலீசார் அந்த எண்ணை தொடர்ந்து டிராக் செய்து வந்தபோது மீண்டும் அந்த கும்பல் கோவை மருதமலைக்குச் சென்றிருந்தது தெரியவந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று கோயிலில் இருந்த 3 பெண்களையும், அவர்களுக்கு ஐடியா தந்து வந்த இளைஞரையும் மடக்கி பிடித்து, வெரைட்டி ஹால் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பரமக்குடியைச் சேர்ந்த ரவி (47), அவரது மனைவி பழனியம்மாள் (40), உறவினர்கள் வனிதா (37), நதியா (37) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அதில் ரவி அவர்களை வழி நடத்தி வந்ததும் 3 பெண்கள் அவரது வழிகாட்டுதலின் படி கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஓடும் பேருந்து, கோயில், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 50 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சாலை விபத்தில் போலீசார் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஜேப்படி கும்பலால் வேறு யாரும் பாதிப்படைந்து விட கூடாது என்பதற்காக தனிப்படை போலீசார் அவர்களை விரைந்து கைது செய்ய தீவிரம் காட்டி வந்தனர். அந்த கும்பல் சென்னையில் இருப்பதை அறிந்ததும், போலீசார் இரவோடு இரவாக போலீஸ் வேனை ஏற்பாடு செய்து சென்னை புறப்பட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக லாரி மோதி வேன் விபத்துகுள்ளானது. அதில் காவல் ஆய்வாளர் கண்ணையன், உதவி ஆய்வாளர் மாரிமுத்துவிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆனாலும் அவர்கள், ஜேப்படி கும்பல் மருதமலையில் இருப்பதை அறிந்து கட்டுடன் வந்து கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் ஜேப்படி கும்பல், மாதத்தில் 30 நாட்களில், 20 நாட்கள் திருட்டிலும், 10 நாட்கள் சுற்றுலாவும் சென்று வந்து உள்ளனர். சுற்றுலாவின் போது நட்சத்திர விடுதிகளில் தங்கி உள்ளனர். கணவன், மனைவியான ரவி, பழனியம்மாள், காஷ்மீர், டெல்லி, மும்பை என இந்தியாவின் பிரபலமான சுற்றுலாத் தளங்களுக்கு சென்று வந்து உள்ளனர்.

நகை திருட்டு கும்பலை விபத்தையும் மீறி ஸ்கேட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
நகை திருட்டு கும்பலை விபத்தையும் மீறி ஸ்கேட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

நகை திருடும் முன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது அவர்கள் வழக்கமாக வைத்து இருந்தனர். அவர்கள் நகை திருடிய பணத்தில் பெங்களூரில் 5 கோடி ரூபாயில் வீடு, விலை உயர்ந்த கார் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களின் குழந்தைகள் மருத்துவர்களாகவும், பொறியியல் படித்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: அம்ரித் பாரத் நிலையத் திட்டம்:கோவை போத்தனூர் ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.