ETV Bharat / state

திருவாரூரில் செயல்படும் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 8:57 PM IST

ONGC Oil Well
மாவட்ட ஆட்சியர்

ONGC Oil Well: திருவாரூரில் செயல்படும் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர்: திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் விளை நிலங்களுக்கு அடியில் குழாய் பதித்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதன் காரணமாக, விவசாய நிலத்தில் அடிக்கடி எண்ணெய் கசிவு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம், பெரியகுடி பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைத்து அதன் மூலமாக எண்ணெய் எரிவாயு எடுத்து வந்ததாகத் தெரிவித்திருந்தது.

இந்த கிணற்றில் அதிக அழுத்தத்துடன் கூடிய வாய்வு தொடர்ந்து வெளியேறி வந்ததால் கடந்த 2013 ஆம் ஆண்டு பணிகளை நிறுத்திக்கொண்டு ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேறியது. இந்நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர், மீண்டும் பராமரிப்பு பணி என்கிற பெயரில் ஓஎன்ஜிசி நிறுவனம் கனரக வாகனங்களுடன் பெரியகுடி பகுதியில் எண்ணெய் எடுக்கும் பணிகளைத் தொடங்கியது.

இதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் மற்றும் விவசாய அமைப்புகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். உடனடியாக அந்த பகுதியில் பணிகளை நிறுத்தி ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

இதனையடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஓஎன்ஜிசி அதிகாரிகள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உடனான சமாதான கூட்டம் இன்று(டிச.16) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பெரியகுடி கிராமத்தில் அமைந்துள்ள ஓஎன்ஜிசிக்கு சொந்தமான எண்ணெய் எரிவாயு கிணற்றில் உள்ள அதிகப்படியான வாய்வு அழுத்தமானது பொதுமக்களுக்கு எந்த நேரத்திலும், பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளதால் அதனைப் பாதுகாப்பான முறையில், வாய்வு அடர்த்தியை முழுவதுமாக குறைத்து முழுமையாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் உரிய முறையில் எழுத்துப்பூர்வமாக ஓஎன்ஜிசி விண்ணப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய அனுமதி வழங்கிய பின்னர் எண்ணெய் கிணற்றினை மூடுவதற்கான பணிகளைத் துவங்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும், மீண்டும் இதை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கோ, செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும், இந்த எண்ணெய் கிணற்றை மூடும் குழுவில் விவசாயிகளை இணைத்துக் கொண்டு பணிகளைத் தொடங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஓஎன்ஜிசி: இந்த எரிவாயு கிணற்றில் உள்ள அதிகப்படியான எரிவாயு அழுத்தத்தை முழுமையாக வெளியேற்றி கிணற்றினைப் பாதுகாப்பான நிலையில் வைப்பதற்கு 39 நாட்கள் ஆகும் என ஓஎன்ஜிசி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது. மேலும் 39 நாட்களுக்குப் பிறகு கிணற்றினை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஓஎன்ஜிசி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் எட்டு பேர் கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. கிணற்றில் வேலை நடைபெறும் பொழுது, அவற்றைக் கண்காணிக்கக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தரப்பில், இருந்து இரண்டு நபர்கள் கண்காணிப்புக் குழுவுடன் ஓஎன்ஜிசி பணிகளைக் கண்காணிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கவில்லை" - டிடிவி தினகரன்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.