ETV Bharat / state

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ரூ.50 சிறப்பு தரிசன கட்டணம் ரத்து.. இந்து சமய அறநிலையத் துறை!

author img

By

Published : Jul 2, 2023, 9:08 PM IST

Tiruvannamalai
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி தினங்களில் சுவாமி தரிசனம் செய்திட சிறப்பு தரிசன கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் அது ரத்து செய்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தற்போது வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப இந்து சமய அறநிலையத்துறையானது பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு மாற்றங்களையும், புதிய வசதிகளையும் ஏற்படுத்தி செம்மையாக செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பௌர்ணமி தினங்களில் சுவாமி தரிசனம் செய்திட சிறப்பு தரிசன கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து அனைத்து பக்தர்களும் பொது தரிசனத்தில் விரைவாக சுவாமி தரிசனம் செய்திடும் வகையில் இந்த மாதம் முதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சபூத தலங்களில் ஒன்றாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திகழ்கிறது. இங்கு ஈசன் மலை உருவில் ஜோதி வடிவிலேயே அருள் பாவித்து வருகின்றார். இத்திருகோயிலுக்கு மாதந்தோறும் பௌர்ணமி நாட்களிலும், கார்த்திகை தீபத் திருநாளன்றும் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமியின் அருள் பெற்று செல்கின்றனர்.

திருவண்ணாமலை திருக்கோயிலுக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்து தந்திடும் வகையில் திருக்கோயில் நிர்வாகமானது மாவட்ட நிர்வாகம், திருவண்ணாமலை நகராட்சி, ஊரக வளர்ச்சித் துறை, காவல்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை போன்ற பல்வேறு துறைகளுடன் இணைந்து திருக்கோயில் வளாகம் மற்றும் கிரிவலப் பாதை பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவறை வசதிகள், தேவையான இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு உடனுக்குடன் தூய்மைப்படுத்துதல், மருத்துவ மையங்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தி வருகிறது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் செயல்படுத்தப்பட்டு வந்த அன்னதானத் திட்டத்தை முழு நேர அன்னதானத் திட்டமாக செயல்படுத்திட ஆணையிட்டார். அதனை கடந்த 31.12.2022 அன்று தொடங்கி வைத்தார். மேலும், இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்திடும் வகையில் ரூபாய் 78 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்டம் வரைவு (மாஸ்டர் பிளான்) தயாரிக்கப்பட்டு, செயல்படுத்திடும் வகையிலான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

2023-24 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்புகளின்படி, கிரிவலப் பாதையில் புகழ்பெற்ற 10 திருக்கோயில்களின் பிரசாதங்கள் பக்தர்களுக்கு கிடைத்திடும் வகையில் பிரசாத கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திருக்கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

திருவண்ணாமலைக்கு விழா காலங்கள் மற்றும் பௌர்ணமி நாட்களில் வருகை தரும் பக்தர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும், சிறப்பு ரயில்களை இயக்கிட மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் தென்னக ரயில்வேக்கு கருத்துருக்களை அனுப்பி நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ,50/- ன் மூலம் ஆண்டிற்கு ரூ.1.32 கோடி வருமானமாக கிடைக்கப் பெற்று வந்த நிலையில் பக்தர்களின் நலன் கருதி, இந்த மாதம் முதல் சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக ரத்து செய்து பொது தரிசனத்தின் மூலமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விரைவாக தரிசனம் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ட்ரிங் ட்ரிங்... நெல்லை தேரோட்டத்தில் கவனத்தை ஈர்த்த 90’ஸ் கிட்ஸ்களின் மிட்டாய்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.