ETV Bharat / state

குற்றாலத்தில் குவியும் சுற்றுலாப்பயணிகள் - அருவிகளில் குளித்து உற்சாகம்!

author img

By

Published : Jul 10, 2023, 11:49 AM IST

Tourists
குற்றாலம்

குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ள நிலையில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிகளில் குவிந்து, கூட்டம் கூட்டமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

குற்றாலத்தில் குவியும் சுற்றுலாப்பயணிகள் - அருவிகளில் குளித்து உற்சாகம்!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலமான குற்றாலத்தில், தென்மேற்குப் பருவமழைத் தொடங்கியதுமே சீசன் தொடங்கிவிடும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் குற்றாலத்தில் சீசன் களைகட்டும். இந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருவார்கள்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பெரிய அளவில் மழை பொழியவில்லை. ஆனால், ஜூலை மாதம் தொடங்கியதும் பரவலாக மழை பெய்யத்தொடங்கிவிட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர், கடந்த இரண்டு நாட்களாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதையடுத்து, கடந்த 8ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிகளில் குவிந்து வருகின்றனர். குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். சாரல் மழையும், லேசான வெயிலும், இதமான காற்றும் வீசுவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் தங்கி இந்த இதமான சூழலை அனுபவித்து மகிழ்கின்றனர்.

அதேபோல், காலையில் வெயிலும், மாலையில் லேசான மழையும் பெய்வதால், தென்காசி மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது. மேலும், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் சீசன் காலங்களில் கிடைக்கும் பழங்கள், மூலிகைகள் உள்ளிட்டவற்றையும் வாங்கிச் செல்கின்றனர். குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளதால், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், குற்றாலம் பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு சரியான உடைமாற்றும் அறை இல்லாததால் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: Courtallam: தொடங்கியது குளுகுளு குற்றாலம் சீசன்.. குற்றாலத்தில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்.. குற்றாலம் சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் விபரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.